உள்ளூர் செய்திகள்

கூடலூர் கூடலழகர்

புரட்டாசி சனியை ஒட்டி தேனி மாவட்டம் கூடலூர் கூடல்அழகிய பெருமாள் கோயிலுக்குச் சென்று வரலாம்.

தல வரலாறு:

இப்பகுதியை ஆண்ட சிற்றரசர் ஒருவர் மதுரை கூடலழகரை தினமும் தரிசித்துவிட்டு, பணியைத் துவங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில், கூடலழகருக்கு கோயில் எழுப்ப வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால் எங்கு கோயில் அமைப்பது என அவருக்குத்தெரியவில்லை. தனக்கு அருளும்படி பெருமாளிடம் வேண்டினார். அவரது கனவில் தோன்றிய கூடலழகர், இந்த இடத்தைச் சுட்டிக்காட்டி கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்படி மன்னர், தான் கண்ட அமைப்பில் தாயார்களுடன் சுவாமிக்கு சிலை வடித்து, இங்கு கோயில் எழுப்பி 'கூடல் அழகர்' என்று திருநாமம் சூட்டினார்.

அஷ்டாங்க விமானம்:

மதுரை கூடலழகர், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோயில்கள் போல் இங்கும் அஷ்டாங்க விமானம் உள்ளது. விமானத்தின் கீழே ஒரு பிரகாரம் உள்ளது. பக்தர்கள் இப்பிரகாரத்தில் வலம் வரலாம். புராதன கோயில்களில் மட்டுமே காணப்படும் அமைப்பு இது.தலைமை பதவிக்கு பிரார்த்தனை: மூலஸ்தானத்தில் கூடல் அழகிய பெருமாள் நின்ற கோலத்தில், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் காட்சி தருகிறார். இவருக்கு திருமஞ்சனம் கிடையாது. வெள்ளிதோறும் எண்ணெய் காப்பு மட்டும் உண்டு. உற்சவர் சுந்தர்ராஜர் புரட்டாசி சனிக்கிழமைகளில் கருடசேவை சாதிக்கிறார். மதுரையில் அருளும் இரண்டு திவ்ய தேச பெருமாள்களின் அருளை இங்கு பெறலாம்.

சிறப்பம்சம்:

முன்மண்டபத்தில் மகாலட்சுமி, நவநீத கிருஷ்ணர், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், ராமானுஜர் உள்ளனர். மண்டப மேற்சுவரில் ராசிசக்கரம் உள்ளது. இதன் மத்தியில் மகாலட்சுமி காட்சி தருகிறாள். இதை தரிசித்தால், ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை. சுவாமி சன்னதி எதிரில் கல் தீப ஸ்தம்பம் உள்ளது. திருக்கார்த்திகையன்று இதில் தீபமேற்றி, சுவாமிக்கு விசேஷ பூஜை செய்கிறார்கள். கல்லால் செய்யப்பட்ட கொடுங்கை (உத்தரம் போன்றது) சிற்பவேலைப்பாடு மிக்கதாக உள்ளது. பாண்டிய நாட்டையும், சேர நாட்டையும் இணைக்கும் மேற்கு தொடர்ச்சிமலையின் எல்லையில் அமைந்த ஊர் இது. இரு நாடுகளும் கூடும் ஊர் என்பதால் இவ்வூர், 'கூடலூர்' என்று பெயர் பெற்றது. பாண்டியரின் மீன் சின்னம், சேரர்களின் வில் சின்னங்கள் கோயிலில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

இருப்பிடம்:

தேனியிலிருந்து 45 கி.மீ., தூரத்தில் கூடலூர். பஸ் ஸ்டாண்டிலிருந்து 1 கி.மீ., தூரத்தில் கோயில்.

திறக்கும் நேரம்:

காலை 10.30- மதியம் 12, மாலை 5.30- இரவு 7.30.

போன்:

04554 - 230 852.