காஞ்சிப் பெரியவர் பூஜித்த சிவன்
இன்று மகாபெரியவர் ஜென்ம நட்சத்திரம்வேலூர் ஆற்காடு அருகிலுள்ள புங்கனூரில் காஞ்சிப்பெரியவர் பூஜித்த சிவன் சுயம்புமூர்த்தியாக வீற்றிருக்கிறார். சிதிலமடைந்த இந்தக் கோயிலில் தற்போது திருப்பணி நடக்கிறது. மகாபெரியவர் அவதரித்த வைகாசி அனுஷ நன்னாளில், அவர் வணங்கிய கோயில் பற்றி அறிந்து கொள்வது பொருத்தம் தானே! தல வரலாறு: 800 ஆண்டுகளுக்கும் பழமையான இந்தக் கோவிலில், உமாமகேஸ்வரி சமேத ஆத்மலிங்கேஸ்வரர் வீற்றிருக்கிறார். காஞ்சிப்பெரியவர் 70 ஆண்டுகளுக்கு முன் புங்கனூர் வந்தபோது பக்தர்களிடம், ''இந்த ஊரில் புராதன சிவன் கோயில் இருக்கிறது. அதை உடனே தரிசிக்க வேண்டும்,'' என்று சொல்ல அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அவர்கள் தேட முற்பட்டபோது, சிதிலமடைந்த நிலையிலிருந்த ஆத்மலிங்கேஸ்வரர் கோயிலைக் கண்டனர். கோயிலுக்கு வந்த காஞ்சிப்பெரியவர், சிவனை வழிபட்டதோடு, ''இன்னும் பல சிவலிங்கங்கள் இப்பகுதியில் இருக்கலாம்,'' என்றும் கூறினார். ஆத்மலிங்கேஸ்வரர்: பாண்டிய நாட்டின் அமைச்சரான மாணிக்கவாசகர் குதிரை வாங்க சென்றபோது, குருந்த மரத்தடியில் குருநாதராக வந்த சிவன் ஆட்கொண்டு அருள்புரிந்தார். தன்னிடம் இருந்த பொருளைக் கொண்டு ஆவுடையார்கோயிலில் (திருப்பெருந்துறை) 'ஆத்மநாதசுவாமி' என்ற பெயரில் சிவனுக்கு கோயில் கட்டி வழிபட்டார். புங்கனூரிலுள்ள இறைவனும் 'ஆத்மலிங்கேஸ்வரர்' என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். அதனால், இங்கு வழிபட்டவர்க்கு ஆவுடையார்கோயிலுக்குச் சென்ற புண்ணியம் உண்டாகும். சுயம்பு மூர்த்தி: புங்கனூர் சிவன், சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார். தெய்வீக சக்தி தானாக வெளிப்படும் இடத்திலேயே சுயம்பு மூர்த்தியாக இறைவன் எழுந்தருள்வதாக ஐதீகம். இவர் ஆத்மஞானத்தை வழங்குபவராக இறைவன் திகழ்கிறார். அம்பிகையின் திருநாமம் உமாமகேஸ்வரி. உலக வாழ்வுக்கு இகபர சவுபாக்கியத்தை தந்தருள்கிறார். சிவனுக்குரிய பிரதோஷ வேளையில் இங்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் தடைகள் நீங்கி குடும்பத்தில் சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். கோயில் திருப்பணி: தற்போது இக்கோயில் முழுமையாக சிதிலமடைந்து விட்டது. 'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பது ஆன்றோர் வாக்கு. அதனால், கோயிலைப் புதுப்பித்து முறையான வழிபாடு நடத்த வேண்டும் என பக்தர்கள் விரும்புகின்றனர். தற்போது பல லட்சரூபாய் மதிப்பீட்டில் திருப்பணி நடந்து வருகிறது. விரும்புபவர்கள் திருப்பணியில் பங்கேற்கலாம்.இருப்பிடம்: ஆற்காட்டிலிருந்து கண்ணமங்கலம் வழியாக திமிரி செல்லும் வழியில் புங்கனூர் 13 கி.மீ.,போன்: 97898 34952, 044 2498 6517.