மழலை அருளும் மாதவன்!
UPDATED : ஆக 11, 2017 | ADDED : ஆக 11, 2017
கர்நாடகாவிலுள்ள உடுப்பியில் ருக்மணி வழிபட்ட பாலகிருஷ்ணர் அருள்பாலிக்கிறார். மழலை அருளும் மாதவனாக இவர் திகழ்கிறார்.தலவரலாறு: கிருஷ்ணர் குழந்தையாக இருந்த கோலத்தை தரிசிக்கும் ஆசை ருக்மணிக்கு ஏற்பட்டது. தேவசிற்பியான விஸ்வகர்மாவிடம் எண்ணத்தை தெரிவிக்க, அவர் சாளக்கிராம கல்லில் பாலகிருஷ்ணர் சிலையை வடித்தார். வலது கையில் தயிர் மத்து, இடது கையில் வெண்ணெய் வைத்த நிலையில் இருந்த சிலையை கண்டு, ருக்மணி மனதை பறி கொடுத்தாள். தினமும் வழிபட்டாள். அவளுக்குப் பின் அர்ஜூனன் வழிபட்டான். பின் கோபி சந்தனத்தில் சிலை வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது. பிற்காலத்தில் மகான் மத்வாச்சாரியாரால் உடுப்பியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயில் கட்டப்பட்டது.மத்வாச்சாரியார்: 1238ல் நாராயண பட்டர், வேதவதி தம்பதிக்கு மத்வாச்சாரியார் பிறந்தார். இவரது நிஜப்பெயர் வாசுதேவன். துவைதம் (கடவுளும் ஆன்மாவும் வேறு) என்னும் கொள்கையை உருவாக்கிய இவர், 79 வயது வரை வாழ்ந்தார். இவரது காலத்திற்கு பின் கோயில் பிரபலமானது.ஒருமுறை கிருஷ்ணரின் சிலையை படகோட்டி ஒருவன் கடல் வழியாக எடுத்து வரும் போது புயல் வீசியது. கடற்கரையில் நின்ற மத்வாச்சாரியார் புயலை அமைதியாக்கி சிலையை மீட்டார். கிருஷ்ணர் குறித்து பாடியபடி உடுப்பியை அடைந்து அங்கு கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்தார். அவர் பாடிய 'துவாதச ஸ்தோத்திரம்' தினமும் இங்கு பாடப்படுகிறது.நட்சத்திர நாயகன் : 'உடு' என்றால் நட்சத்திரம். 'பா' என்றால் தலைவன். 'உடுபா' என்னும் பெயர் பிற்காலத்தில் 'உடுப்பி' என்றானது. தட்சனின் மகள்களான 27 நட்சத்திரங்களை, சந்திரன் மணந்தான். இவர்களில் ரோகிணியிடம் மட்டும் அன்பு காட்டினான். மற்ற பெண்கள் தந்தையிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட தட்சன், சந்திரனின் பிரகாசம் நீங்கும்படி சபித்தான். தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க கிருஷ்ணனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான். இதன் அடிப்படையில் கிருஷ்ணர் நட்சத்திர நாயகனாக விளங்குகிறார். ஐந்துநிலை ராஜகோபுரம் உள்ள இக்கோயிலில் கிருஷ்ணர் மேற்கு நோக்கி இருக்கிறார். தெற்கு நோக்கிய கோபுர வாசல் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் சென்று தரிசிக்கின்றனர். அதிகாலை 4:30 - 5:00 மணிக்குள் நடத்தப்படும் நிர்மால்ய பூஜை சிறப்பு மிக்கது. ஆண்டு தோறும் மூலவரின் பூஜைக்கு தேவைப்படும் நான்கு டன் சந்தனத்தை அரசு வழங்குகிறது. குழந்தை இல்லாதவர்கள் கிருஷ்ணரை வழிபட்டு பசு தானம், துலாபாரம் செலுத்துகின்றனர்.ஜன்னல் தரிசனம்: மூலஸ்தானத்தின் கிழக்கு கதவு விஜயதசமியன்று மட்டுமே திறக்கப்படும். இதனருகே உள்ள மற்றொரு வாசல் வழியாகத் தான் பூஜை செய்யும் மடாதிபதிகள் செல்வர். கிருஷ்ணரை ஒன்பது துவாரங்கள் உள்ள பலகணி (ஜன்னல்) வழியாகத் தான் தரிசிக்க முடியும். வெள்ளியால் ஆன இந்த துவாரத்திற்கு ''நவக்கிரக துவாரம்'' என்று பெயர். இதில் கிருஷ்ணரின் 24 வித கோலங்கள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. பலகணியின் முன்புள்ள தீர்த்த மண்டபத்தில் தினமும் இரவு சாமர பூஜை, மண்டல பூஜை நடக்கிறது. இங்குள்ள கருடன் சிலை அயோத்தியிலிருந்து வதிராஜா தீர்த்தா என்பவரால் கொண்டு வரப்பட்டது. எட்டு மடங்கள்: மத்வாச்சாரியார் தனக்கு பின் கிருஷ்ணருக்கு பூஜை செய்ய எட்டு மடங்களை நிறுவினார். இந்த மடங்களை சேர்ந்தவர்கள் கிருஷ்ணருக்கு பூஜை செய்யும் அதிகாரம் பெற்றிருக்கின்றனர். இதில் கிருஷ்ணபூர மடத்தில் கோயில் உள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள சுவர் முழுவதும் எண்ணெய் விளக்குகள் விசேஷ நாட்களில் ஏற்றப்படும். கருவறையின் வடக்குப் பக்கம் மத்வாச்சாரியார் தங்கிய அறை உள்ளது. இங்கு அவர் ஒளி வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம்.சொன்னாலே புண்ணியம்: கோயிலின் கிழக்கே உள்ள தீர்த்தத்தின் நடுவில் கருங்கல் மண்டபம் உள்ளது. இத்தீர்த்தம் மத்வபுஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது. அபிஷேக தீர்த்தத்தின் பெயரைச் சொன்னாலே புண்ணியம் கிடைக்கும். மார்கழியில் நீராடினால் விரும்பியது நடக்கும். குளத்தின் தென்மேற்கு மூலையில் பாகீரதி என்னும் கங்கையம்மன் சன்னதி உள்ளது.எப்படி செல்வது: மங்களூருவில் இருந்து 60 கி.மீ.,விசேஷ நாட்கள்: அட்சய திரிதியையிலிருந்து வைகாசி பவுர்ணமி வரை வசந்தவிழா, ராமநவமி, கிருஷ்ணஜெயந்தி, மார்கழியில் தனுர்மாத பூஜை, பிப்ரவரியில் மத்வ நவமி.நேரம்: காலை 4:30 - இரவு 9:00 மணிதொடர்புக்கு: 0820 - 252 0598