உள்ளூர் செய்திகள்

அமாவாசை கிரிவலம்

திருவண்ணாமலை மாவட்டம் பெரண மல்லுாரில் குன்றின் மீது வரத ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. குழந்தைப் பேறு இல்லாதவர்களின் குறை தீர்க்க வல்லவர் இவர். அமாவாசை அன்று கிரிவலம் செல்வது இங்கு வழக்கம்.200 ஆண்டுக்கு முன் இப்பகுதியில் வாழ்ந்த ஒரு தம்பதிக்கு குழந்தைப் பேறு இல்லை. ஒருநாள் அவர்கள், வயலில் உழுத போது கலப்பையில் ஏதோ தட்டுப்பட, ஆஞ்சநேயர் சிலையை கண்டெடுத்தனர். அருகில் இருந்த குன்றின் மீது பிரதிஷ்டை செய்தனர். ஆஞ்சநேயரின் அருளால் தம்பதிக்கு குழந்தை உண்டானது. வரத ஆஞ்சநேயர் என்னும் பெயரில் அருளும் இவர், வடக்கு நோக்கி நின்றபடி உள்ளார். வலது கையால் அபயம் அளித்தும், இடது கையில் தண்டம் ஏந்தியும் இருக்கிறார். காலப்போக்கில் இங்கு வழிபாடு இல்லாமல் இருந்த நிலையில், சிறுவன் ஒருவன் கோயிலைத் துாய்மை செய்து வழிபட்டான். இதைக் கண்ட ஊர் மக்களும் சிறுவனுடன் சேர்ந்து பணியாற்றினர். அதன் பின் கோயில் புதுப்பிக்கப்பட்டது. சென்னை நங்கநல்லுார் ஆஞ்சநேயர் சிலையை வடிப்பதற்கு கல் எடுத்து வரும் போது, தடைகள் குறுக்கிட்டன. இவருக்கு சிறப்பு பூஜை நடத்திய பின்னர் நிலைமை சீரானது.விருப்பம் நிறைவேற அமாவாசையன்று கிரிவலம் சுற்றுகின்றனர் பக்தர்கள். மன தைரியம், உடல்நலம் பெருகும். திருமணத்தடை, தம்பதி கருத்துவேறுபாடு, குழந்தை இல்லாமை, கிரக தோஷம் நீங்கும். அனுமன் ஜெயந்தியன்று 1008 வடை மாலை, வெற்றிலை மாலை சாத்தப்படும். அன்று அன்னதானம் நடக்கும்.எப்படி செல்வது?சென்னை தாம்பரத்தில் இருந்து வந்தவாசி வழியாக பெரணமல்லுார் 90 கி.மீ., செய்யாறு, வந்தவாசியில் இருந்து 22 கி.மீ. ஆரணியில் இருந்து 20 கி.மீ., விசஷே நாட்கள்: அனுமன் ஜெயந்தி, ஸ்ரீராம நவமி, மாதந்தோறும் அமாவாசைநேரம் : காலை 7:00 - இரவு 8:00 மணிஅருகிலுள்ள தலம்: செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில் (25 கி.மீ.,)