உள்ளூர் செய்திகள்

பிள்ளையார்பட்டி ஹூரோ

மே 1 கும்பாபிஷேகம்சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி 'ஹீரோவாக' திகழும் கற்பகவிநாயகர் கோவிலில் மே 1 கும்பாபிஷேக விழா நடக்கிறது.தல வரலாறு: மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட இக்கோவில் 1600 ஆண்டுக்கு முந்தையது. மகேந்திர பல்லவர் காலத்தை சேர்ந்த இது, நகரத்தார் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இங்கு சுவாமி கற்பக விருட்சம் போல, வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தருபவர் என்பதால் 'கற்பக விநாயகர்' எனப்படுகிறார். மருத மரத்தை தலமரமாக கொண்ட தலம் நான்கு. அவை திருநெல்வேலி மாவட்டத்தில் திருப்புடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர், ஆந்திராவில் ஸ்ரீசைலம், சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி. அதனால் இங்குள்ள சிவன் 'மருதீசர்' என்னும் பெயரில் வீற்றிருக்கிறார். வாடாமலர் மங்கை அம்மன் தனி சன்னதியில் இருக்கிறாள். திருவீசர் என்னும் பெயரில் சிவனுக்கு இன்னொரு சன்னதியும் உள்ளது. இவருடன் சிவகாமி அம்மன் இருக்கிறாள்.தேர் திருவிழா : விநாயகருக்கு தேர் திருவிழா நடக்கும் தலங்களில் இது சிறப்பு மிக்கது. விழாவின் போது, விநாயகர், சண்டிகேஸ்வரர் இருவரும் தனித்தனி தேரில் பவனி வருவர். பிள்ளையார் தேரில் இரண்டு வடங்களில் ஒன்றை பெண்களும், மற்றொரு வடத்தை ஆண்களும் இழுப்பர். சண்டிகேஸ்வரர் தேரை பெண்கள், குழந்தைகள் இழுப்பர். தேர் திருவிழாவன்று விநாயகருக்கு 80 கிலோ சந்தனத்தால் காப்பு சாத்தப்படும். ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும் இதில் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்பர்.ராட்சத கொழுக்கட்டை: விநாயகர் சதுர்த்தியன்று உச்சிக் காலத்தில் முக்குறுணி என்னும் 18 படி அரிசி மாவால் ஆன ராட்சத கொழுக்கட்டையை நைவேத்யம் செய்வர். அரிசி மாவுடன், எள் இரண்டு படி, கடலை பருப்பு ஆறு படி, தேங்காய் 50, பசு நெய் ஒரு படி, ஏலம் 100 கிராம், வெல்லம் 40 கிலோ சேர்க்கப்படும். இதை கலவையாக்கி, உருண்டை சேர்த்து அதனைத் துணியால் கட்டி, மடப்பள்ளியில் அன்னக் கூடையில் வைத்து கட்டுவர். இதை நீர் நிரப்பிய அண்டாவில் அதன் அடிப்பகுதியில் படாதவாறு தொங்கவிட்டு மடப்பள்ளி முகட்டில் தொங்க விடுவர். இரண்டு நாள் தொடர்ச்சியாக இது வேக வைக்கப்படும். பின்னர் இதனை காவடி போல தூக்கி வந்து மூலவருக்கு உச்சிகால பூஜையில் படைப்பர். மறுநாள் கொழுக்கட்டை சூடு ஆறிய பின் பக்தர்களுக்கு வழங்கப்படும். சதுர்த்தி விழா: சதுர்த்தியன்று இரவில் விநாயகர், வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருள்வார். திருக்கார்த்திகையன்று விநாயகர், உமாதேவி, சந்திரசேகரர் பவனி நடக்கும். அதன் பின் விநாயகர், மருதீசர் சன்னதிகளில் சொக்கப்பனை கொளுத்தப்படும். மார்கழி திருவாதிரையன்று சிவகாமியுடன் நடராஜர் புறப்பாடு நடக்கும். விநாயகர் சதுர்த்தி விழா 10 நாள் நடக்கும். சதுர்த்திக்கு ஒன்பது நாளுக்கு முன்பு காப்பு கட்டி, கொடியேற்றம் நடக்கும். பத்தாம் நாள் காலையில் தீர்த்தவாரி நடக்கும், அன்று உச்சிகால பூஜையின் போது கொழுக்கட்டை நைவேத்தியம், தங்க, வெள்ளி வாகனங்களில் சுவாமி வீதி உலா வருவார்.கும்பாபிஷேக விழா: இக்கோவிலில் திருப்பணி முடிந்து மே 1 காலை 9:00 - 10:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. அன்று மாலை சுவாமிக்கு மகா அபிஷேகமும், இரவு பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடக்கும். இருப்பிடம்: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் காரைக்குடி சாலையில் 9 கி.மீ., காரைக்குடி மதுரை சாலையில் 18 கி.மீ.,நேரம் : காலை 6:00 - 12:00 மணி, மாலை 4:00 - 8:00 மணி. தொலைபேசி: 04577-264 240, 264 241