உள்ளூர் செய்திகள்

கிரகதோஷம் போக்கும் போளி

32 கைகளுடன் கூடிய விஸ்வரூப வீரபத்திரரை பெங்களூரு கவிப்புரம் குட்டஹள்ளியில் தரிசிக்கலாம். இங்கு போளி நைவேத்தியம் செய்ய கிரகதோஷம் நீங்கும். மருமகனான சிவனுக்கு அழைப்பு விடுக்காமல், ஒருமுறை தாட்சாயிணியின் தந்தையான தட்சன் யாகம் நடத்தினான். அதை தட்டிக் கேட்கச் சென்ற மகளையும் அவமதித்தான். கோபமடைந்த சிவன், தனது அம்சமாக 32 கைகளுடன் கூடிய விஸ்வரூப வீரபத்திரரை உருவாக்கி அனுப்பினார். தட்சன் நடத்திய யாகத்தை அழித்ததோடு, யாகத்தில் பங்கேற்ற தேவர்களையும் வீரபத்திரர் தண்டித்தார். இதன் அடிப்படையில் புராண காலத்தில் 32 கைகளுடன் 'பிரளயகால வீரபத்திரர்' சிலை வடித்து கோயில் எழுப்பப்பட்டது. காலப்போக்கில் கோயில் சிதிலமடைந்தது. பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட ராயராயசோழன் வேட்டைக்குச் சென்ற இடத்தில் புதரின் நடுவில் பேரொளி மின்னக் கண்டார். புதரை விலக்கியபோது, வீரபத்திரர் சிலை இருப்பது தெரிந்தது. அச்சிலையை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினார். மழு, நாகம், சூலம், பாணம், சங்கு, சக்கரம் உட்பட 32 கைகளிலும் ஆயுதம் ஏந்திய நிலையில் உக்கிரமான நிலையில் வீரபத்திரர் இருக்கிறார். அருகில் தட்சனும், அவனது மனைவி பிரசுத்தாதேவியும் உள்ளனர். சன்னதிக்கு எதிரில் நந்தி உள்ளது. உற்ஸவர் வீரபத்திரரும் 32 கைகளுடன் இருக்கிறார். செவ்வாய்க்கிழமைகளில் ருத்ராபிஷேகம் நடக்கிறது. கிரக தோஷம் உள்ளவர்கள் பிரச்னை தீர துளசி, வில்வம், நாகலிங்கப்பூ, எலுமிச்சை மாலை அணிவித்து, போளி நைவேத்யம் செய்கின்றனர். கார்த்திகை மாதம் கடைசி செவ்வாயன்று சுவாமியை சாந்தப்படுத்த தேங்காய்த்துருவல் சாத்தி அலங்காரம் செய்வர். சுவாமி சன்னதி வலப்புறம் உள்ள குன்றில் வீர ஆஞ்சநேயரின் புடைப்புச் சிற்பம் உள்ளது. வீரபத்திரரின் இடப்புறம் உமாமகேஸ்வரர் சன்னதி உள்ளது. இவரது பாதத்தை நந்தீஸ்வரர் பிடித்த நிலையிலும், விநாயகர், முருகன் வணங்கிய நிலையிலும் உள்ளனர். விநாயகர், மகாலிங்கம், பார்வதி, சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன. ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் அமர்ந்தபடி சூரியன் உள்ளார். எப்படி செல்வது: பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்டிலிருந்து 5 கி.மீ.,விசஷே நாள்: கார்த்திகை செவ்வாய்க்கிழமை, மகாசிவராத்திரிநேரம்: காலை 8:00 - 11:00 மணி; மாலை 6:00 - 8:00 மணிசெவ்வாய், ஞாயிறன்று: காலை 8:00 - 1:00 மணி; மாலை 6:00 - 9:00 மணிதொடர்புக்கு: 080 - 2661 8899அருகிலுள்ள தலம்: பெங்களூரு இஸ்கான் கோயில் (5 கி.மீ.,) நேரம்: காலை 7:15 - 1:00 மணி மாலை 4:30 - 8:30 மணிதொடர்புக்கு: 080 - 2347 1956