பொன்னான வாழ்வளிக்கும் பொன்மலையான்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நகரிலுள்ள பொன்பெருமாள் மலை அடிவாரத்தில் சீனிவாசப் பெருமாள் கோவில் கொண்டிருக்கிறார். பொன்மலையான் எனப்படும் இவரைத் தரிசித்தால் பொன்னான வாழ்வு உண்டாகும். தல வரலாறு: மதுரையின் மேற்கு எல்லையை நிர்ணயித்து, கோட்டை எழுப்ப விரும்பிய பாண்டிய மன்னர் கூடலழகர் பெருமாளிடம் வேண்டினார். மன்னரின் கனவில் தோன்றிய பெருமாள், “மேற்கு திசை நோக்கி செல். அங்கு மலை குன்றின் உச்சியில் சங்கு, சக்கரம், கருடன், அனுமன் சிலையுடன் கூடிய தீபகம்பம் ஒன்று தென்படும். அதன் அடிவாரத்தில் கோட்டை எழுப்பு,” என உத்தரவிட்டார். அதன்படி மன்னரும் இங்கு கோட்டை எழுப்பினார். அக்கோட்டை தற்போது குலசேகரன் கோட்டை எனப்படுகிறது. இந்த மலையில் காக்காபொன் என்னும் மண் நிறைந்திருப்பதால் 'பொன் மலை' என்றும், அதன் அடிவாரத்திலுள்ள பெருமாள் 'பொன்மலையான்' என்றும் பெயர் பெற்றனர். சீனிவாசப்பெருமாள்: அடிவாரக் கோவிலில் சீனிவாசப்பெருமாள் மூலவராக வீற்றிருக்கிறார். மேற்கைகளில் சங்கு, சக்கரம் தாங்கி நிற்கும் இவர் திருப்பதி சீனிவாசரைப் போலவே கம்பீரமாக காட்சி தருகிறார். கீழ் இரு கைகளில், வலக்கை திருவடி நோக்கியும், இடக்கை தொடையில் வைத்த நிலையிலும் உள்ளது. பெருமாளுக்கு எதிரே கருடாழ்வார் கைகூப்பிய நிலையில் உள்ளார். தை மாதத்தில் நடக்கும் சீனிவாசப்பெருமாள் திருக்கல்யாணத்தின் போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை, சுவாமிக்கு அணிவிக்கப்படுகிறது. புரட்டாசி சனியன்று ஏற்றும் தீபத்தில் திருப்பதி ஏழுமலையான் ஜோதி வடிவில் காட்சியளிக்கிறார். அன்று அன்னதானம் உண்டு. நேர்த்திக்கடன்: பொன்மலை பெருமாளை வழிபட்டால், திருமணத்தடை நீங்கும். வாய் பேசாத குழந்தைகளின் குறை நீங்க, அடிவாரத் தூணில் பக்தர்கள் வெண்கலமணி கட்டும் நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். நினைத்தது நிறைவேற 108 முறை ஸ்ரீராமஜெயம் எழுதி மாலையாக தொடுத்து அடிவாரத் தூண் அல்லது மலையிலுள்ள தீபகம்பத்தில் கட்டுகிறார்கள். அரசமரத்தடியில் விநாயகரும், தவக்கோல சனீஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர். தென் கிழக்கிலுள்ள வேட்டைகாரசுவாமி கோவிலை வேட்டைக்கு செல்பவர்கள் வணங்குவது வழக்கம். மலையின் சிறப்பை பரம்பக்குடி சாமிநாதபிள்ளை பாடியுள்ளார்.இருப்பிடம்: மதுரை - திண்டுக்கல் சாலையில் 30 கி.மீ., தூரத்தில் வாடிப்பட்டி. இங்கிருந்து குலசேகரன்கோட்டை செல்லும் வழியில் 1 கி.மீ., தூரத்தில் கோவில். நேரம்: காலை 7:00 - 9:00, மாலை 4:00 - இரவு 9:00 மணிஅலைபேசி: 98421 13873, 98421 18168.