உள்ளூர் செய்திகள்

ராஜ வாழ்வு தரும் ராஜேஸ்வரி

பக்தர்களுக்கு ராஜ வாழ்வளிக்கும் ராஜராஜேஸ்வரி கோவை சுந்தராபுரம் குறிச்சியில் அருள்பாலிக்கிறாள்.தல வரலாறு:குறிச்சியிலுள்ள ஒரு தோட்டத்தின் அருகில் ஒரு தெய்வீகப் புற்று இருந்தது. அதை அடுத்துள்ள மலையில் இருந்து பொன்னிற நாகம் ஒன்று தினமும் புற்றில் வந்து தங்கிச் சென்றது. இதைக் கண்ட மக்கள், அம்பாளே நாகப்புற்று வடிவமாய் எழுந்தருளியதாகக் கருதினர். அம்பாளுக்கு ராஜராஜேஸ்வரி என பெயர் சூட்டப்பட்டது. அந்தப் புற்றில் மக்கள் பாலூற்றி வழிபட்டனர். தங்கள் குறைகளைச் சொல்லி நிவாரணம் பெற்றனர். பிறகு அம்பாளுக்கு சிலை வடிக்கப்பட்டு கோவில் கட்டப்பட்டது. விநாயகர், துர்க்கை, சிவலிங்கம் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிறப்புப் பூஜைகள் செய்து, வழிபட்டனர். சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமி தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. இங்குள்ள விநாயகர் சிலை மிகவும் பழமையானது. ராஜராஜேஸ்வரியின் கையில் அங்குசம், கரும்பு, ஐங்கணை ஆகியவை உள்ளன. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு இணையான கோவில் இது. இங்குள்ள புற்றின் கீழ் 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த நாகயக்ஞபவீத சுவாமிகளின் ஜீவ சமாதி உள்ளதாக நம்பப்படுகிறது.தல பெருமை:வடக்குப் பிரகாரத்தில் பஞ்ச நாகலிங்க கிருஷ்ணர் சிலை உள்ளது. கிருஷ்ணனை, கம்சனிடமிருந்து காப்பாற்ற யசோதையிடம் கொண்டு சென்றார் அவரது தந்தை வசுதேவர். அவர்கள் யமுனை நதியைக் கடந்த போது, நாகம் குடை பிடித்தது. அந்த புராண சம்பவத்தை நினைவுறுத்துவது போல இச்சிலை அமைந்திருக்கிறது. கோயில் முகப்பைக் கடந்ததும் மகாமண்டபம் உள்ளது. வெளிப்பிரகாரத்தின் மேற்கு திசையில் கருப்பராயர், சப்த கன்னியர், ஆதிவிநாயகர், ஆதி சிவன், ஆதிசக்தி, காளிங்க நர்த்தனர், புற்று, சித்தர் ஜீவசமாதி, கன்னிமூல கணபதி, சக்தி பாலமுருகன் ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன. தேவியின் தேவகோட்டத்தின் தென்புறம் கவுமாரியும், மேல்புறம் வைஷ்ணவியும், வடபுறம் பிராம்ஹியும் அருள்பாலிக்கின்றனர். தலவிருட்சங்களின் கீழே மேடையில் பஞ்ச நாகர் சிலைகள் உள்ளன. ராஜராஜேஸ்வரியிடம் கண் சம்பந்தமான நோய் தீரவும், செல்வ வளம் பெற்று ராஜவாழ்வு வாழவும் பிரார்த்திக்கின்றனர்.இருப்பிடம் :கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தூரத்திலுள்ள குறிச்சி வீட்டு வசதி வாரிய (பகுதி 2) குடியிருப்பு.நேரம் :காலை 6:30 - 9:00 மணி, வெள்ளிக்கிழமையில் மதியம் 12:00, மாலை 5:30 - இரவு 8:30 மணி. அலைபேசி :98434 85412, 98425 37893.