சனீஸ்வரர் தலம்
நவகைலாய தலங்களில் ஸ்ரீவைகுண்டம் காசிவிஸ்வநாதர் கோவில் சனீஸ்வரனுக்குரியதாக விளங்குகிறது. தல வரலாறு: அகத்தியரின் சீடரான உரோமசர், சிவபூஜை செய்ய குருவிடம் அனுமதி கேட்டார். தாமிரபரணி நதியில் ஒன்பது மலர்களை மிதக்க விடும்படியும், அவை கரை சேரும் இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் தெரிவித்தார். அதன்படி உரோமசர் செய்ய அந்த இடங்களில் லிங்கப்பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். அந்த இடங்களில் கோவில்கள் அமைக்கப்பட்டன. அவை நவ கைலாயம் எனப்பட்டன. ஒன்பதில் ஆறாவது மலர் கரை ஒதுங்கிய தலம் ஸ்ரீவைகுண்டம். இங்கு நிறுவிய லிங்கம் கைலாசநாதர் என பெயர் பெற்றது. இவர், சிவகாமி அம்பாளுடன் வீற்றிருக்கிறார். சிவன் சன்னிதி எதிரிலுள்ள நந்தியைச் சுற்றிலும் 108 விளக்குகள் உள்ளன. இந்த விளக்குகளை ஏற்றி சுவாமியை வழிபட்டால் செல்வம் பெருகும்.குமரியின் கொடிமரம்: அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த இக்கோவிலில், நவ கைலாய தலங்கள் உருவாவதற்கு காரணமாக இருந்த உரோமச முனிவர், நடராஜர், அக்னி வீரபத்திரர், வீரபத்திரர் சிற்பங்கள் தூண்களில் இடம் பெற்றுள்ளன. காசி விஸ்வநாதர், விசாலாட்சிக்கு தனி சன்னிதி உள்ளது. இங்குள்ள கொடிமரம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்டது. இத்தலத்திலுள்ள நடராஜர், சந்தன சபாபதி என அழைக்கப்படுகிறார்.சனி தலம்: நவ கைலாய தலங்கள் ஒவ்வொன்றும் ஒரு கிரக தோஷத்தை போக்குபவையாக உள்ளன. இந்தக் கோவில் சனி தலமாகும். சனீஸ்வரர் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். சனி திசை, சனிபுத்தி நடப்பில் உள்ளவர்கள் இங்கு பரிகாரம் செய்து வழிபட்டால் தடைபட்ட திருமணம் நடத்தல், இழந்த சொத்து கிடைத்தல் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும். இத்தலம் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு நிகரானதாக கருதப்படுகிறது. சனிப்பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசியினரும் இங்கு வழிபடுகின்றனர்.திவ்யதேசத்தலம்: திருமாலும், லட்சுமியும் இவ்வூரில் தங்கியிருப்பதால் இது 'ஸ்ரீவைகுண்டம்' என்றழைக்கப்படுகிறது. 'வைகுதல்' என்றால் 'தங்குதல்'. 108 திவ்யதேசங்களில் ஒன்றான, கள்ளபிரான் கோவில் இங்குள்ளது. நவதிருப்பதிகளில் இக்கோவில் சூரியனுக்கு உரியதாக விளங்குகிறது. ஒரே ஊரில் நவகைலாயமும், நவதிருப்பதியும் அமைந்துள்ளது சிறப்பு. திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் ஆற்றல் பெற்ற குமரகுருபரர் இவ்வூரில் பிறந்தவர்.பூதநாதருக்கு புட்டு : இந்தக் கோவிலில், சாஸ்தாவின் அம்சமான பூதநாதர், காவல் தெய்வமாக வீற்றிருக்கிறார். சித்திரைத் திருவிழாவின் போது, இவருக்கே முதல் மரியாதை செய்யப்படும். சாஸ்தாவின் அம்சமான இவருக்கு புட்டு, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை நைவேத்யம் செய்யப்படுகிறது. இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. சந்தனத்தைலம் மட்டுமே பூசுவர். விருப்பங்கள் நிறைவேற இவருக்கு வடைமாலை சாத்துகின்றனர். அந்தக் காலத்தில் கோவிலை பூட்டி சாவியை அர்ச்சகர்கள், பூதநாதர் முன்பாக ஒப்படைத்து விட்டுச் செல்லும் வழக்கம் இருந்தது.திருவிழா: சித்திரை, ஐப்பசியில் பிரம்மோற்ஸவம், ஐப்பசி திருக்கல்யாணம், கந்தசஷ்டி, சிவராத்திரி.இருப்பிடம்: திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் 24 கி.மீ.,தொலைபேசி: 04630 - 256 492.