வி.ஜ.பி.,க்கள் தங்கியிருக்கும் அறைக்கதவைத் தட்டி, அவரது அனுமதி கிடைத்ததும் <உள்ளே நுழைவது போல, தங்கள் ஊருக்கே வி.ஐ.பி.,யான முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில் நடை திறக்கும் முன், சந்நிதி கதவை ஒன்றுக்கு இரண்டு முறை தட்டி அனுமதி பெற்ற பிறகு திறக்கும் பழக்கம் இருக்கிறது. இந்த தெய்வம், தேனிமாவட்டம் <<உத்தமபாளையத்தில் அருள்பாலிக்கிறார். பக்தர்கள் இவரைத் தங்கள் தந்தையாக மதித்து'ஐயா' என்று மரியாதையுடன் அழைக்கிறார்கள்.
தல வரலாறு:
இங்குள்ள குன்றின் மீது ஒரு சிவன் கோயில் இருந்தது. இவரது சந்நிதி காவலராக முத்துக்கருப்பண்ண சுவாமி எழுந்தருளியிருந்தார். மந்திரவாதி ஒருவன், தான் செய்ய இருந்த அட்டூழிய வேலைகளுக்காக, இங்கிருந்த சிவலிங்கத்தைத் தனது இருப்பிடத்திற்குக் கொண்டு செல்ல முயன்றான். முத்துக்கருப்பண்ணர் அவனைத் தடுத்து வதம் செய்தார். பின்பு நிரந்தரமாக, சிவனின் பாதுகாவலராக அடிவாரத்திலேயே எழுந்தருளினார். காலப்போக்கில் குன்றின் மீதிருந்த சிவன் கோயில் மறைந்து போனது. பின், முத்துக்கருப்பண்ணர் பிரசித்தி பெற்றுவிட்டார். இவருக்கு தனிக்கோயில் கட்டப்பட்டது. பாறையின் அடியில் காட்சி தருவதால் இவர், 'பாறையடி முத்தையா' என்றும் அழைக்கப்படுகிறார்.
நவபாஷாண சிலை:
நெற்றியில் நாமம், முறுக்கு மீசையுடன் சுவாமி ஆஜானுபாகுவாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். ஒரு கையில் அரிவாள் இருக்கிறது. இடது காலால் மந்திரவாதியின் மார்பை மிதித்து, அவனது தலையைப் பிடித்திருக்கிறார். சுவாமியின் முகம், மார்பு ஆகியவை நவபாஷாணத்தால் ஆனது. இந்தப் பகுதியில் சுவாமிக்கு அடிக்கடி வியர்க்கும் என்பதால், விசிறியால் வீசி விடுகிறார்கள்.
நம்ம ஊரு வி.ஐ.பி.,:
காலையில் கோயில் நடை திறக்கும் முன்பாக அர்ச்சகர், சந்நிதி கதவை இரண்டு முறை தட்டிவிட்டு வெளியிலேயே நின்று கொள்கிறார். சிறிது நேரம் கழித்து மீண்டும் கதவை தட்டிவிட்டு, அதன்பின்பு சந்நிதிக்குள் சென்று சுவாமியை பூஜிக்கிறார். சுவாமியிடம் அனுமதி பெற்றே நடை திறக்க வேண்டுமென்பதன் அடிப்படையில் இவ்வாறு செய்கிறார்கள். பக்தர்கள் இவரைத் தங்கள் தந்தையாகக் கருதி, 'ஐயா' என்று அழைக்கிறார்கள்.
வாழை மட்டை வழிபாடு:
முத்துக்கருப்பண்ண சுவாமிக்கு அபிஷேகம் கிடையாது. எனவே, இவரது உக்கிரத்தைக் குறைக்கும்விதமாக, அமாவாசையன்று நிழலில் உலர்த்திய தர்ப்பையை தீயில் எரித்து கிடைக்கும் சாம்பலுடன் கஸ்தூரி, ஜவ்வாது, புனுகு, பச்சை கற்பூரம் மற்றும் ஐந்து வித எண்ணெய் சேர்த்த கலவை தயாரித்துக் காப்பிடுகின்றனர். பவுர்ணமியன்று வெண்ணெய் காப்பு செய்யப்படும். தைலக்காப்பின்போது சுவாமி உக்கிரமாக இருப்பார். இச்சமயத்தில், சந்நிதிக்குள் பெண்கள், குழந்தைகளை அனுமதிப்பதில்லை. சிவனின் காவலர் என்பதால், சிவராத்திரியன்று நள்ளிரவில் இரவுக்கு விசேஷ பூஜை நடக்கும். திருமணமாகாதவர்கள் சுவாமியின் பாதத்தில் வாழை மட்டை படைத்து, அதில் பாதியை பிரசாதமாகப் பெற்று வருவார்கள். இந்தப் பிரார்த்தனையால் குடும்பம் வாழையடி வாழையாக தழைக்கும் என்கிறார்கள்.
சிவனை பூஜிக்கும் அம்பிகை:
சுவாமி சந்நிதியின் இருபுறமும் தேவபூதகன், ஆகாச பூதகன் ஆகிய துவாரபாலகர்களும், கோயில் எதிரில் அக்னி வீரபத்திரரும், காட்சி தருகின்றனர். இவரை வணங்கிய பிறகே, பக்தர்கள் கருப்பணருக்கு பூஜை செய்கின்றனர். பிரகாரத்தில் நவக்கிரகம், தட்சிணாமூர்த்தி, நாகர் சந்நிதிகள் உள்ளன. கோயிலுக்குப் பின்புறமுள்ள குன்றில் சதுரபீடத்துடன் கூடிய ஆகாய லிங்கமாக, சிவன் காட்சி தருகிறார். அருகில் பார்வதி, மண்டியிட்டு மலருடன் சிவபூஜை செய்கிறாள். கருப்பண்ணரின்வாகனமான குதிரையும் உள்ளது. குன்றின் அடியில் வற்றாத 'பாறையடி தீர்த்தம்' இருக்கிறது.
இருப்பிடம்:
தேனியிலிருந்து 31 கி.மீ., தூரத்தில் உத்தமபாளையம். பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., சென்றால் கோயில்.
திறக்கும் நேரம்:
காலை 9- 12, மாலை 5- இரவு.
போன்:
99409 94548.