உள்ளூர் செய்திகள்

சீதாமர்ஹி ஜானகி மந்திர்

சீதை பிறந்த ஊர் மிதிலாபுரி என்று தான் எல்லோரும் நினைத்து இருப்பீர்கள். அது தான் இல்லை சீதாமர்ஹி என்று சொல்கிறார்கள். வாங்க அந்த இடம் பற்றி தெரிந்து கொள்வோம்.ஞானியான யாக்ஞவல்கியர் தலைமையில், பல முனிவர்கள் கூடி, பிரம்மம் குறித்த ஸதஸில் (சபை) ஈடுபட்டனர். நேபாளத்திலுள்ள மிதிலாபுரியில் நடந்த அக்கூட்டத்தில் ஜனகரும் பங்கேற்றார். ஒவ்வொருவருடைய மனநிலையை அறிய விரும்பி அதற்கான ஏற்பாட்டினை செய்தார் தலைமை ஞானி. சபை காரசாரமாக நடைபெறும் பொழுது, 'மிதிலை தீப்பிடித்து எரிகிறது' என்று பதறியவாறு வீரர்கள் வந்து செய்தி தெரிவித்தனர். அதைக்கேட்ட பலரும் தங்கள் உடைமைகளை காப்பாற்றிக் கொள்ள தன் இருப்பிடத்திற்கு விரைந்தனர். ஆனால் ஜனகர் மட்டும் எந்த வித மனச் சஞ்சலமின்றி, 'எல்லாம் ஈசன் செயல்' என்றபடி இருந்தார். அவரின் உறுதிப்பாடு எல்லோருக்கும் வர வேண்டும் என போற்றினார். ராஜரிஷி என்ற பட்டத்தினை வழங்கி அவரை கவுரவித்தார் பிரம்மஞானி. ஒருசமயம் சீதாமர்ஹி என்ற இடத்தில் பூமாதேவியான சீதையை குழந்தையாக கண்டெடுத்தார் ஜனகர். அந்த இடத்தில் அவர் உழுவது போலவும், பெட்டியில் சீதை இருப்பது போலவும் தத்ரூபமாக சுதை சிற்பத்தை வடித்துள்ளனர். அருகே ஒரு குளமும் வெட்டியுள்ளனர். சீதாமர்ஹி ஊருக்குள் ஒரு கோயிலை கட்டியுள்ளனர். அகலமாக பரந்து விரிந்த மண்டபம். அதை அடுத்து கருவறையில் ஸ்ரீராமர், சீதை, அனுமன் என மூவரும் காட்சி தருகின்றனர். பெரும்பாலும் கோயில்களில் அனுமன் சீதாராமரை சேவித்தவாறு இருப்பார். ஆனால் இந்த கோயிலில் மட்டும் சீதாராமரை போல அருள் செய்தவாறு உள்ளார். பொறுமையின் வடிவம். பெண்குலத்திற்கு பெருமை சேர்ப்பவர்களில் முதலிடத்தில் இருக்கும் சீதை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் அமைந்த கோயிலுக்கு நாள் தோறும் சுற்றுலா பயணிகள் வந்தவாறு உள்ளனர். இவ்வூருக்கு அருகே சீதாமரி என்ற இடத்தில் தான் சீதை பூமியை பிளந்து கொண்டு உள்ளே சென்றாள். அங்கும் சீதைக்கு கோயில் உள்ளது. எப்படி செல்வது: பாட்னாவில் இருந்து 140 கி.மீ.,விசேஷ நாள்: ஸ்ரீராமநவமி, சீதை பிறந்த நாள், சீதாராமர் திருமண நாள்நேரம்: காலை 6:00 - 1:00 மணி; மாலை 4:00 - 9:00 மணிதொடர்புக்கு: 98736 02702, 91355 19355அருகிலுள்ள தலம்: ஜனக்பூர் விவாக மந்திர் 54 கி.மீ., (திருமணம் கைகூடும்)நேரம்: காலை 6:00 - 1:00 மணி; மாலை 4:00 - 8:30 மணி