உள்ளூர் செய்திகள்

சிருங்கேரி ஆதிசங்கரர்

காலடியில் அவதரித்த ஆதிசங்கரருக்கு கர்நாடக மாநிலம் சிருங்கேரியில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.தல வரலாறு: தசரதர் குழந்தை வரம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். இந்த யாகத்தை நடத்தி கொடுத்தவர் ரிஷ்யசிருங்க முனிவர். அவர் வாழ்ந்த இப்பகுதி 'சிருங்கேரி' ஆனது. மாகிஷ்மதி நகரில் விசுவரூபர் என்பவரிடம் ஆதிசங்கரர் வேதம் குறித்து வாதம் செய்தார். இதற்கு விசுவரூபரின் துணைவியும், சரஸ்வதி அவதாரமுமான உபய பாரதி நடுவராக இருந்தார். வாதத்தில் சங்கரர் தோற்றால் துறவறம் விடுத்து இல்லறம் மேற்கொள்ள வேண்டும். விசுவரூபர் தோற்றால் துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்பது நிபந்தனை. இருவருக்கும் மாலை அணிவித்து, யாருடைய மாலை முதலில் வாடுகிறதோ அவரே தோற்றவர் என அறிவிக்கப்பட்டது. 17 நாள் போட்டியின் முடிவில் விசுவரூபரின் மாலை வாடியது. தோல்வியை ஒப்புக்கொண்ட விசுவரூபர் துறவறத்திற்கு தயாரானார். உடனே அவரது மனைவி, ''சங்கரரே! மாலை வாடியதால் மட்டும் தாங்கள் வெற்றி பெற்றதாக கருத முடியாது. என்னிடம் இல்லறம் பற்றி வாதம் செய்து வெற்றி பெற்றால் தான் அது முழு வெற்றியாகும்,''என்றார்.சங்கரரோ பிரமச்சாரி. ஒரு மாதத்திற்கு பின் இல்லறம் பற்றிய வாதம் வைத்துக்கொள்ளலாம் என்றார். இல்லறம் பற்றி யோசித்து கொண்டு செல்கையில், அமருகன் என்ற மன்னன் இறந்ததை அறிந்த சங்கரர், தன்யோக சக்தியால் மன்னனின் உடலில் புகுந்து இல்லறம் பற்றி அறிந்தார். சங்கரரின் உடலை அவரது சீடர் பத்மபாதர் பாதுகாத்து வந்தார். மீண்டும் சங்கரர் தன் உடலில் புகுந்து உபயபாரதியிடம் வாதம் செய்தார். உபயபாரதி தோற்றார். விசுவரூபர் துறவறம் ஏற்றார். சங்கரர் இவருக்கு 'சுரேசுவரர்' என்ற நாமம் கொடுத்து தன் சீடராக ஏற்றுக்கொண்டார்.சரஸ்வதி அம்சமான உபயபாரதியிடம் சங்கரர்,''தான் செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து வர வேண்டும்,''என்ற வரத்தை பெற்றார். அதற்கு சம்மதித்த உபயபாரதி,''சங்கரரே! உம்மை தொடர்ந்து வருகிறேன். ஆனால், நீர் திரும்பி பார்க்காமல் செல்ல வேண்டும். திரும்பிபார்த்தால் நான் அந்த இடத்திலேயே நின்றுவிடுவேன். அதன் பின் தொடர்ந்து வரமாட்டேன்,''என்று நிபந்தனை விதித்தார்.சங்கரர் தன் சீடர்களுடன் செல்ல, பின்னால் உபயபாரதி கால் சலங்கை ஒலிக்க வந்து கொண்டிருந்தாள். அனைவரும் சிருங்கேரியை அடைந்தனர். அங்கு பாம்பும் தவளையும், பசுவும் புலியும் இணைந்து விளையாடுவதைக் கண்ட சங்கரர், சாத்வீகமான அந்த இடம், யோகிகள் தங்குவதற்கு தகுந்தது என தீர்மானித்தார். அப்போது, உபயபாரதியின் சிலம்பொலி நின்று விட திரும்பிபார்த்தார் சங்கரர். நிபந்தனைப்படி நின்று விட்டாள் உபயபாரதி. அங்குள்ள பாறை மீது ஸ்ரீசக்கரம் வடித்து அவளுக்கு 'சாரதா' என்ற திருநாமம் சூட்டி பிரதிஷ்டை செய்தார். அப்போது, உபயபாரதி அவருக்கு சரஸ்வதியாகக் காட்சி கொடுத்து, ''சங்கரா! இன்று முதல் இந்த பீடம் சாரதா பீடம் எனப்படும். இந்த பீடத்தில் அமர்பவர்களிடத்தில் நான் குடி கொண்டு ஆசி வழங்குவேன்,''என அருள்பாலித்தாள். சுரேசுவரர் சங்கர பீடத்தின் முதல் ஆச்சார்யர் ஆனார்.சிறப்பம்சம்: துங்கபத்ரா நதிக்கரையில் சிருங்கேரி உள்ளது. சாரதா அம்பிகை, வித்யாசங்கரர் (சிவன்) கோயில்கள் ஏற்கனவே உள்ளன. இப்போது, ஆதிசங்கரருக்கு கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பீடாதிபதி பாரதிதீர்த்த சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.திறக்கும் நேரம்: காலை 6- பகல் 2 மணி, மாலை 5-இரவு 9 மணி.உணவு, தங்கும் வசதி: மதியம் 12 முதல் 3 மணிவரையும், இரவு 7 முதல் 9 மணிவரை அன்னதானம் நடக்கிறது. மடத்து விடுதிகளும், தனியார் லாட்ஜ்களும் உள்ளன.இருப்பிடம்: மங்களூரிலிருந்து 107 கி.மீ. தூரம். காலை 5 முதல் மாலை 4.30 வரை மலைப்பாதையில் பஸ்கள் உள்ளன.