தங்கத்தாயார் கனகவல்லி
லவகுசருக்கு அருள்புரிந்த பெருமாள், சென்னை கோயம்பேட்டில் வைகுண்டவாசராக அருள்பாலிக்கிறார். இங்குள்ள தங்கத்தாயாரான கனகவல்லியை அட்சய திரிதியை நன்னாளில் வழிபட்டால் செல்வ வளம் பெருகும்.தல வரலாறு: அயோத்தியில் ராமன் ஆட்சி பொறுப்பேற்றதும், சீதையின் கற்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் சிலர் அவதூறு பேசினர். அவளது கற்பின் திறத்தை நிரூபிக்க ராமர், அவளை வனத்திற்கு அனுப்பினார். வனத்தில் இருந்த வால்மீகி முனிவர், சீதைக்கு ஆதரவு அளித்தார். கர்ப்பவதியான அவள், வால்மீகி ஆசிரமத்தில் லவன், குசன் என்னும் பிள்ளைகளைப் பெற்றாள். தந்தையான ராமர் பற்றி அறியாமல் அவர்கள் வளர்ந்தனர். இச்சமயத்தில் அயோத்தியில் அஸ்வமேத யாகம் நடந்தது. யாகத்தில் இருந்த குதிரை லவகுசர் வசித்த வனப்பகுதிக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் அதைக் கட்டிப் போட்டதோடு, சத்ருக்கனன், லட்சுமணருடன் போரிட்டு வென்றனர். இதையறிந்த ராமன், வனத்திற்கு ஒற்றனை அனுப்பி சீதை, வால்மீகியை அழைத்து வர கட்டளையிட்டார். சீதையும் தன் கணவரைச் சந்திக்கும் ஆசையில் கிளம்பினாள். இதனிடையே லவகுசரிடம், சீதா - ராமரே அவர்களின் பெற்றோர் என்ற உண்மையை வால்மீகி தெரிவித்தார். அதன்பின், ராமரிடம் லவகுசர் மன்னிப்பு வேண்டினர். அப்போது திருமாலே நேரில் வந்து லவகுசருக்கு வைகுண்டவாசராக காட்சியளித்தார். இதன் அடிப்படையில் கோயம்பேடு வைகுண்டவாசர் கோவில் உருவானது.வளம் தரும் கனகவல்லி: வைகுண்டத்தில் பெருமாள் அமர்ந்த கோலத்தில் இருப்பார். ஆனால், இங்கு நின்ற கோலத்தில் தாயார்களுடன் காட்சியளிக்கிறார். உற்சவர் 'பக்தவத்சலர்' எனப்படுகிறார். தாயார் கனகவல்லி, தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். கனகம் என்பதற்கு 'தங்கம்' என்பது பொருள். தங்கத்தாயாரான இவளை வெள்ளியன்று வழிபட்டால் செல்வ வளம் மிக்க வாழ்வு உண்டாகும். முன் மண்டபத்தில் வால்மீகி மகரிஷியுடன் லவகுசர் காட்சி தருகின்றனர். இங்குள்ள விமானம், சுவாமியின் நிழல் போல இருப்பதாக ஐதீகம். எனவே இதை சாயா(நிழல்) விமானம் என்கின்றனர். பிரகாரத்தில் புற்று இருக்கிறது. பித்ரு தோஷம் உள்ளவர்கள் பெருமாளை வழிபட்டு, லவகுச தீர்த்தத்தில் தர்ப்பணம் செய்கின்றனர். தீர்த்தக் கரையில் ஆஞ்சநேயருக்கு தனிக் கோவில் உள்ளது. 'கோ' எனப்படும் அரசனாகிய ராமனின் குதிரைகளை, 'அயம்' என்னும் இரும்பு வேலியால், லவகுசர் கட்டி வைத்ததால் இத்தலம் 'கோயம்பேடு' எனப்பட்டது. 'பேடு' என்றால் 'வேலி' எனப் பொருள்.மரவுரியில் ராமர்: ராவணன், சீதையைக் கடத்திய போது உதவி புரிந்தவர் ஆஞ்சநேயர். லட்சுமணன், நொடிப் பொழுதும் அண்ணனைப் பிரியாதவர். இவர்கள் இருவரும் ராமருடன் எப்போதும் காட்சியளிப்பது வழக்கம். ஆனால், இங்கு ராமர், சீதை மட்டுமே இருக்கின்றனர். ராமன், அரசராக இல்லாமல் மரவுரி ஆடை தரித்து துறவி கோலத்தில் இருக்கிறார். வைகானஸ ஆகமத்தை ஏற்படுத்திய விகனஸருக்கு சன்னதி உள்ளது. பிரகாரத்தில் இரண்டு வில்வ மரம், ஒரு வேம்பு மரம் சேர்ந்து உள்ளது. இதனை 'பார்வதி சுயம்வர விருட்சம்' என்கின்றனர். இதை சிவன், விஷ்ணு, அம்பிகையின் அம்சமாக கருதி வழிபடுகின்றனர். திருமண தோஷம் உள்ளவர்கள், செவ்வாயன்று பார்வதி சுயம்வர மரத்திற்கு மஞ்சள் கயிறு கட்டி வேண்டிக் கொள்கின்றனர்.இருப்பிடம்: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ.,நேரம்: அதிகாலை 5:30 -12:00 மணி, மாலை 4:30 - 8:30 மணிதொலைபேசி: 044 -2479 6237