உள்ளூர் செய்திகள்

இரட்டை சம்பளம் கிடைக்க எளிய வழியிருக்கு!

ஜன.15 திருவள்ளுவர் தினம்* உழைப்பின் மூலம் உடலுக்கான (வாழ்வதற்கான) சம்பளம் கிடைக்கும். அதுபோல, பிறர் மகிழ கொடுத்து உதவுதல், நற்செயலில் ஈடுபட்டு புகழ் பெறுதல் ஆகியவற்றால் ஆத்மாவுக்கு ஊதியம் கிடைக்கும்.* பெற்ற தாய் பட்டினி கிடக்கும் சூழ்நிலை உருவானாலும், சான்றோர்கள் பழிக்கும் விதத்தில் மனிதன் தர்மத்தை மீறி செயல்படக்கூடாது.* ஒரு மனிதனுக்கு அன்பும், பண்பும் நிறைந்த மனைவி அமைந்து விட்டால் அவனிடம் இல்லாதது ஏதுமில்லை. எல்லாச் சிறப்பும் பெற்றவனாக மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்துவான்.* வீட்டுக்கு வரும் விருந்தினர்களை அன்புடன் வரவேற்று உபசரிப்பவர்களே நல்லவர்கள். அவர்களின் குடும்பம் மகிழ்ச்சியுடன் வாழும் விதத்தில் மகாலட்சுமி குடியிருப்பாள்.* உள்ளம் என்னும் தாமரை மலரில் வீற்றிருக்கும் கடவுளின் திருவடிகளை இடைவிடாமல் சிந்திக்க வேண்டும். இதனால் வாழ்வில் துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும்.* எழுத்துக்கள் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பது போல, இந்த உலகம் முழுவதும் கடவுளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.* தண்ணீர் இல்லாமல் உலக உயிர்கள் வாழ்க்கை நடத்த முடியாது. அதனால் உலகில் ஒழுக்கம் நிலைத்திருக்க மழைப்பொழிவு மிக அவசியமானது.* இளமைப் பருவத்திலேயே மனிதன் தர்மம் செய்ய எண்ணம் வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் உற்ற துணையாக உதவும்.* பூவுலகில் தர்மநெறி தவறாமல் வாழ்பவன் வானுலகில் உள்ள தெய்வத்திற்கு ஈடாக மதிக்கப்படுவான். தான் மட்டுமல்லாமல் மற்றவரும் தர்மநெறி தவறாமல் வாழச் செய்பவன் துறவிகளை விட மேலானவன்.* பிள்ளைகள் அறிவில் சிறந்தவர்களாக அமைந்து விட்டால், அவர்களது பெற்றோருக்கு மட்டுமின்றி, உலகிலுள்ள மற்றவர்களுக்கும் நன்மை உண்டாகும்.* தான் பெற்ற பிள்ளையை இந்த உலகம் 'சான்றோன்' என்று போற்றுவதைக் கேட்டால், அவனை கருவில் சுமந்த காலத்தை விட அவனது தாய் அளவில்லாத மகிழ்ச்சி அடைவாள்.* சரியான சமயத்தில் ஒருவர் செய்த உதவி தினையளவு சிறிதாக இருந்தாலும், நல்லவர்கள் பனையளவு போல பெரிதாகப் போற்றுவர்.* எந்த பாவத்தைச் செய்தாலும் ஒரு மனிதன் தப்பிப் பிழைக்க முடியும். ஆனால், ஒருவர் செய்த நன்றியை மறந்து விட்டால் அதற்குப் பிராயச்சித்தம் தேட முடியாது.* அடக்கமுடன் இருப்பவன் வானுலக தேவர்களைப் போல சிறந்து விளங்குவான். செல்வந்தன் அடக்கமுடன் வாழ்ந்தால் அவன் செல்வம் மேலும் அதிகரிக்கும்.* ஒழுக்கத்தை மனிதன் உயிராக மதிக்க வேண்டும். கற்ற வித்தையை மறந்தால் கூட ஒருவன் மீண்டும் கற்றுக் கொள்ள முடியும். ஆனால் ஒழுக்கத்தில் இருந்து தவறினால் மீட்பது இயலாத செயல்.* உண்ணாமல் விரதம் மேற்கொள்வதை விட, ஒருவர் பேசும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்வதே சிறந்த பண்பாகும்.* யாரையும் பாதிக்காத வகையில், பிறருக்கு தீங்கு நேராமல் பேசும் பொய் உண்மைக்குச் சமமானது. அதேநேரம் உண்மை மட்டும் பேசும் நல்லவர்களின் புகழ் உலகெங்கும் பரவி நிற்கும்.சொல்கிறார் தெய்வப்புலவர்