உள்ளூர் செய்திகள்

துணிந்து நில்! தொடர்ந்து செல்!! தோல்வி கிடையாது தம்பி!!!

ஜன.12 விவேகானந்தர் பிறந்தநாள்* துணிவுடன் நில்லுங்கள். முன்னேறிக் கொண்டே இருங்கள்! உங்களின் தற்போதைய நிலை குறித்த எண்ணம் சிறிதும் வேண்டாம். லட்சியத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டு கடமையில் ஈடுபடுங்கள். வெற்றி பெறுவீர்கள்.* முழுப்பொறுப்பையும் உங்கள் தோள் மீது சுமத்திக் கொண்டு பணியாற்றுங்கள். உங்களுக்கான விதியை வகுத்து தொடர் வெற்றிக்கு வழிவகுத்திடுங்கள்.* உலகம் பெரிய உடற்பயிற்சிக்கூடம். அதில் நம்மை வலிமை உள்ளவர்களாக ஆக்கவே மனிதர்களாக நாம் மண்ணில் பிறந்திருக்கிறோம்.* அரிய செயல்கள் அனைத்தும் பெரிய இடையூறுகளை முறியடித்த பின்னரே சாத்தியமாகி இருக்கின்றன. அதனால் கடின உழைப்பும், விடாமுயற்சியும் அவசியமானவை.* எதை மண்ணில் விதைத்தோமோ அதையே அறுவடை செய்ய முடியும். நமது விதியை நாமே வகுத்துக் கொள்கிறோம். செயலில் மட்டுமில்லாமல் மனதாலும் நல்லதை சிந்தியுங்கள்.* முகத்தில் புன்னகையும், பேச்சில் இனிமையும் கொண்டிருங்கள். குழந்தையின் கள்ளம் கபடமற்ற தன்மையோடு செயலாற்றுங்கள். அகந்தையை அறவே ஒழித்து விடுங்கள்.* நீங்கள் நாய்க்கு ஒரு பிடி சோறு போட்டாலும், அந்த நாயைக் கடவுளாக எண்ணி வழிபடுங்கள். கடவுளே உலகிலுள்ள எல்லா உயிர்களுமாக இருக்கிறார். * நல்லதைக் கற்றுக் கொள்ளுங்கள். கற்றதை மனதில் அடிக்கடி சிந்தியுங்கள். இதன் மூலம் நீங்கள் ஒளி பெற்றவராகத் திகழ்வீர்கள். * தன்னம்பிக்கை மனிதனுக்கு மிக அடிப்படையானது. தன்னை நம்பாதவன் கடவுள் மீது பக்தி இல்லாத நாத்திகனைப் போன்றவன். * மனிதன் எதை நினைத்துக் கொண்டிருக்கிறானோ அதுவாகவே மாறி விடும் சக்தி படைத்தவன். வலிமையுடைவன் என நினைத்தால் நிச்சயம் வலிமை படைத்தவனாகி விட முடியும்.* 'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்ற மனஉறுதி ஒருவனுக்கு இருந்தால் அவனிடம் பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும்.* பிறருக்குச் செய்யும் எளிய சேவை கூட உங்களுக்கு பேராற்றலை உண்டாக்கும். நாளடைவில் உங்கள் மனம் சிங்கத்திற்கு நிகரான வலிமை பெற்று விடும்.* தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்பவர்களே உண்மையில் வாழ்பவர்கள். மற்ற அனைவரும் வாழ்க்கையை வீணாக கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.* பாமர மனிதனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்துவதே ஆன்மிகத்தின் உண்மையான நோக்கம். * உண்மை எங்கே அழைத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். கோழையாகவும், வேஷதாரியாகவும் இருந்து விடாதீர்கள்.* அடக்கப்படாத மனம் மனிதனை கீழ்நோக்கி இழுத்துச் செல்கிறது. அடக்கப்பட்ட மனமோ பாதுகாப்பு அளிப்பதோடு சுதந்திரமாக வாழச் செய்கிறது.வாழ்த்துகிறார் வீரத்துறவி