நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே...!
* ஒளிவு மறைவு இன்றி செய்ததை செய்ததாகச் சொல்லுங்கள். செய்யாததை செய்யவில்லை என மறுத்து விடுங்கள். நேர்மையாக வாழ்ந்தால் தோல்வியே வருவதில்லை.* சாத்வீகமாக வாழ்பவனே எல்லா உயிர்களையும் நேசித்து மகிழ்வான். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய ஓடோடி வருவான்.* செய்த குற்றத்தை மன்னிக்கும் மனம் கொண்டவனாக மனிதன் இருக்க வேண்டும். இந்த குணத்தால் மனத்தூய்மை ஏற்படும்.* பிறர் பொருளைக் கண்டு ஆசைப்படுபவன், வாழ்வில் திருப்தி அடைய மாட்டான். நாளடைவில் அவன் இந்த இழிகுணத்தின் பிடியில் சிக்கி எல்லாவற்றையும் இழப்பான்.* யாரையும் ஏமாற்றக்கூடாது. ஏமாறவோ ஏமாற்றவோ இடம் கொடுத்தால் இருதரப்புக்கும் கஷ்டமே.* வேடிக்கையாகவோ, கோபமாகவோ, பண ஆசையிலோ, பிறருக்கு பயந்தோ மனிதன் பொய் பேசக் கூடாது. எந்த சூழலிலும் பொய் பேசாதவனே மக்களில் உயர்ந்தவன்.* உண்மையே உள்ளத்தூய்மையை உண்டாக்கும். மனச்சுத்தமே ஒழுக்கத்தின் உயிர்நாடி. அதனால் பொய்யை விலக்கி விட்டு, உண்மையின் பாதையில் செல்லுங்கள்.* பட்டினி, நோய், கவலையால் வாடுபவர்களுக்கு தேவையான உணவும், மருந்தும் கொடுத்து உதவுங்கள். அவர்களின் மனம் மகிழும் விதத்தில் ஆறுதல் வார்த்தைகளைக் கூறுங்கள்.* பேராசை படைத்தவனுக்கு இந்த உலகம் முழுவதையும் பரிசளித்தால் கூட திருப்தி உண்டாவதில்லை. இருப்பதைக் கொண்டு திருப்தியாக இருப்பவன் வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.* கூட்டு முயற்சியால் கிடைத்த பொருளை கூட்டாளிக்கு பகிர்ந்து அளியுங்கள். சுயநலம் சிறிதுமின்றி பொதுநலத்துடன் அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள்.* தேவைக்கு மேல் கிடைத்த பணத்தை சேமிப்பதை விட, தேவை உள்ளவனுக்கு கொடுப்பது சிறந்தது. பணம் சேரச் சேர மனிதனிடம் ஒழுக்கம், நேர்மை எண்ணம் குறைய ஆரம்பிக்கிறது.* அறம் சிறந்த மங்கலப்பொருள். கொல்லாமை, ஒழுக்கம் ஆகிய இரண்டும் அறத்தின் அடிப்படை இலக்கணங்கள்.* வாழ்க்கையை விருப்பம் போல நீட்டிக்க முடியாது. இந்த குறுகிய காலத்தில் உங்களின் முன்னேற்றத்திற்கும், பிறர்நலனுக்கும் பயன்படுத்த முயலுங்கள்.* நல்ல நம்பிக்கையின்றி நல்லறிவு உண்டாகாது. நல்லறிவு இல்லாமல் நல்ல ஒழுக்கம் உண்டாகாது. எப்போதும் நல்ல நம்பிக்கை கொண்டவனாக இருங்கள்.* வேரில் இருந்து அடிமரமும், அதில் இருந்து கிளைகளும் உண்டாவது போல அடக்கத்தில் இருந்து தர்மமும் அதிலிருந்து நற்செயல்களும் உண்டாகின்றன.* போதும் என்ற மனம் கொண்டவன் மனநிறைவுடன் வாழ்வதோடு, மற்றவர்களையும் நிம்மதியுடன் வாழச் செய்வான்.- மனம் திறக்கிறார் மகாவீரர்