உள்ளூர் செய்திகள்

தை அமாவாசைக்கு தினைமாவு பிரசாதம்

சாலிகோத்ர மகரிஷிக்கு தை அமாவாசையன்று காட்சியளித்த பெருமாள், திருவள்ளூரில் வைத்திய வீரராகவர் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். இங்கு அமாவாசையன்று பக்தர்களுக்கு தினைமாவு பிரசாதம் வழங்கப்படுகிறது. தல வரலாறு: புருபுண்ணிய முனிவர், புத்திர பாக்கியத்திற்காக மகாவிஷ்ணுவை வேண்டி சாலியக்ஞம் (யாகம்) நடத்தினார். இதன் பலனாக பிறந்த ஆண் குழந்தைக்கு யாகத்தின் பெயரால், 'சாலிகோத்ரர்' என்று பெயர் சூட்டினார். சாலிகோத்ரரும் பெருமாள் பக்தராக விளங்கினார். இங்குள்ள தீர்த்தக்கரையில் பெருமாளின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். சுவாமிக்கு தினைமாவு படைத்து, யாராவது ஒருவருக்கு கொடுத்தபின்பு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருசமயம் பூஜையின் போது வந்த முதியவர், பசிப்பதாகச் சொல்லி உணவு கேட்டார். மகரிஷி அவருக்கு சாப்பிட சிறிது தினை மாவு கொடுத்தார். அதைச் சாப்பிட்டவர் தனக்கு மேலும் பசிப்பதாகச் சொல்லவே, தான் சாப்பிட வைத்திருந்த மீதி மாவையும் அளித்தார். தனக்கு களைப்பாக இருப்பதாகச் சொன்னவர், சயனத்தில் ஆழ்ந்து மகாவிஷ்ணுவாக சுயரூபம் காட்டினார். அந்த இடத்தில் கோவில் எழுப்பப்பட்டது.அமாவாசை தலம்: வீரராகவப்பெருமாள் ஆதிசேஷன் மீது தலை வைத்து, புஜங்க சயனக்கோலத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். முதியவராக வந்தவர் என்பதால், தாயார் கிடையாது. மார்பில் மகாலட்சுமி, நாபியில் பிரம்மா உள்ளனர். தீராத நோய்களை தீர்த்து வைப்பவர் என்பதால், 'வைத்திய வீரராகவப்பெருமாள்' என்று அழைக்கின்றனர். சாலிகோத்ர மகரிஷிக்கு, விஷ்ணு தை அமாவாசையன்று காட்சியளித்ததால் இத்தலம் அமாவாசை தலமாகத் திகழ்கிறது. அமாவாசையன்று பக்தர்களுக்கு தினைமாவு பிரசாதம் தருகின்றனர். கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடினால் பாவம் தீரும் என்பர். ஆனால், இங்குள்ள தீர்த்தத்தை மனதால் நினைத்தாலே பாவம் நீங்கும் என்பதால் இதை 'ஹ்ருத்தாப நாஸினி' என்கின்றனர். ஒன்பது கரைகளுடன் அமைந்த பெரிய தீர்த்தம் இது. அமாவாசையன்று இந்த தீர்த்த நீரை தலையில் தெளித்தாலே நம் முன்னோர் செய்த பாவமும், நமது பாவமும் நீங்கி குடும்பமே சுபிட்சமாகி விடும் என்பது ஐதீகம்.மன்னன் மகள்: மகாலட்சுமி தாயார், கனகவல்லி என்ற பெயரில், இப்பகுதியை ஆண்ட தர்மசேன மகாராஜாவின் மகளாக அவதரித்தாள். அவள் திருமணப்பருவம் அடைந்தபோது நல்ல வரன் அமைய, மன்னன் சுவாமியை வேண்டினான். பெருமாளே வந்து, கனகவல்லியை மணம் முடித்துத் தரும்படி கேட்டார். மன்னனும் தன் மகளை மணம் முடித்து வைத்தார். பின் இருவரும் கோவிலுக்குள் சென்று மறைந்தனர். தன்னிடம் மகளாக வளர்ந்தது லட்சுமி தாயார் என்பதை அதுவரை அறியாத மன்னன் பரவசப்பட்டான். பின், தாயாருக்கு தனிச்சன்னிதி கட்டப்பட்டது. வசுமதி என்றும் இவளுக்குப் பெயருண்டு. மன்னன் வசித்ததாகக் கருதப்படும் ஈக்காடு என்னுமிடத்தில் தாயாருக்கு கோவில் உள்ளது.படுப்பது எங்கே: இங்கு வந்த திருமங்கையாழ்வார் பெருமாள் பற்றி பாடிய போது, அவரது கண்ணுக்கு ராமபிரான் பள்ளி கொண்டது போல தெரியவே, ராமனே பள்ளி கொண்டிருப்பதாக பாடினார். இதனால் சுவாமிக்கு, 'வீரராகவர்' (ராகவர் என்றால் ராமர்) என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். 'எவ்வுள் கிடந்தான்' என்றும் இவருக்குப் பெயருண்டு. சாலிகோத்ர மகரிஷியிடம் முதியவராக வந்த பெருமாள், “தான் எங்கே படுப்பது?” என்னும் பொருளில், 'எவ்வுள்?' என்று ஒரே வார்த்தையில் கேட்டார். இதனால் சுவாமிக்கு இந்தச்சொல்லின் பெயராலும் பெயர் அமைந்து விட்டது. இந்த தலத்திற்கும், 'திருஎவ்வுளூர்' எனப்பெயர் வந்து, திருவள்ளூர் என மருவி விட்டது.இருப்பிடம்: திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகில் கோவில். ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ.,நேரம்: காலை 6:30 - 12:00, மாலை 4:00 -8:00 மணி. அமாவாசை நாட்களில் காலை 5:00 - இரவு 8:30மணி.அலை/தொலைபேசி: 97894 19330, 044 - 2766 0378