உள்ளூர் செய்திகள்

சிறுநீரக நோய்க்கு தீர்வு தரும் ஊட்டத்தூர் நடராஜர்

இருதய நோய் தீர, திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் இருதயாலீஸ்வரர் கோவில் உள்ளது போல, சிறுநீரகம் தொடர்பான பிரச்னை தீர, திருச்சி அருகிலுள்ள ஊட்டத்தூர் சுத்த ரத்தினேஸ்வரர் கோவிலில் உள்ள பஞ்ச நதன நடராஜருக்கு வெட்டிவேர் மாலை சாத்தி வழிபடலாம்.தல வரலாறு: ராஜராஜசோழன் காலத்தில் ஊட்டத்தூரின் பகுதியில் இருந்த வில்வ வனத்தில் கோவில் கட்டும் பணி நடக்க இருந்தது. அதற்கான இடத்தை தேர்வு செய்ய மன்னர் வருவதை முன்னிட்டு, பணியாளர்கள் மண்வெட்டியால் புதர்களைச் செதுக்கினர். ஒரு குறிப்பிட்ட இடத்தில் பூமியில் இருந்து ரத்தம் பீறிட, தோண்டிப் பார்த்தனர். அங்கு ஒரு சிவலிங்கம் இருந்தது. மன்னன் அந்த இடத்தில், சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து கோவில் கட்டினார். சுவாமிக்கு சுத்த ரத்தினேஸ்வரர் என பெயரிடப்பட்டது. அம்பிகை, அகிலாண்டேஸ்வரி என்னும் பெயரில் அருள்கிறாள். மாறுபட்ட நந்தி: இங்கு நந்தி தேவர் கிழக்கு நோக்கி படுத்திருப்பது போல காட்சியளிப்பது மாறுபட்டது. கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவிரி, சிந்து, துங்கபத்திரா ஆகிய நதி தேவதைகளுக்குள் 'தங்களில் யார் பெரியவர்?' என்ற விவாதம் ஏற்பட, சிவனிடம் முறையிட்டனர். இந்த பொறுப்பை நந்தி தேவரிடம் சிவன் ஒப்படைத்தார். நந்தி, நதிகளின் நீரைக் குடித்துப் பார்த்து விட்டு, 'பெரியவர் யார்?' என தெரிவித்தார். இதன் பின் நந்தி, தான் குடித்த நீரை எல்லாம் நதியாக ஓடச் செய்தார். அந்த நந்தியாறே, நதிகளில் எல்லாம் உயர்ந்தது என்றார். எல்லா நதிகளுமே உயர்வானது தான் என்பதை மறைமுகமாக தெரிவிக்கவே, இவ்வாறு தீர்ப்பு வழங்கினார். இறந்தவர்களின் அஸ்தியை இதில் கரைப்பது புனிதமானதாகும். 'காசியை விட குன்றுமணி அளவு உயர்ந்தது ஊட்டத்தூர்' என சொல்வர்.சூரிய வழிபாடு: சிவலிங்கத்தின் மீது, மாசி 12, 13, 14, மற்றும் வைகாசி விசாகத்தன்று காலை சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவர் மீது படுகிறது. விசாகத்தன்று மட்டும் மூன்று நிமிடமே ஒளிபடும். தேவார வைப்புத்தலமான இங்கு சிவனை பார்த்த நிலையில் மேற்கு நோக்கி ஒரு நந்தியும், கிழக்கு நோக்கி ஒரு நந்தியும் இருப்பது சிறப்பு.கோரைப்பல் துர்க்கை: விநாயகர், தட்சிணாமூர்த்தி, சூரியன், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நாயன்மார், அதிகார நந்தி, துர்க்கை, கஜலட்சுமி, சரஸ்வதி, சிவகாம சுந்தரி, வீரபத்திரர், பைரவர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.இங்குள்ள துர்க்கை கோரைப்பல் தெரியும்படி காட்சியளிக்கிறாள். பயம் விலக இவளை வணங்குவர். கொடிமரம் அருகில் உள்ள விதானத்தில் 27 நட்சத்திரங்கள், 15 திதிகள், 12 ராசிகள், நவக்கிரகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.கோடி மடங்கு பலன் : இங்கு பிரதோஷ நாளில் வழிபட்டால் கோடி மடங்கு புண்ணியம் கிடைப்பதாக அகஸ்தியர் குறிப்பிட்டுள்ளார். தட்சிணாமூர்த்தியை மாசி மாத வளர்பிறை நாட்களில் பஞ்சாட்சர மந்திரமான 'ஓம் நமசிவாய' சொல்லி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும். கோவிலின் நடுவில் பிரம்ம தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தை கோவிலுள்ள சுரங்கப் பாதையின் வழியாக, அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு எடுத்துச் சென்றதாக வரலாறு கூறுகிறது.சிறுநீரக நோய்க்கு தீர்வு: ஆலிங்க நதனம், பஞ்ச நதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என ஐந்து வகை கற்கள் உள்ளன. இதில் பஞ்ச நதனம் தெய்வீக தன்மை கொண்டது. இங்குள்ள நடராஜர் பஞ்சநதனம் கல்லால் செய்யப்பட்டவர். இந்தக்கல் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்கும். இழந்த பதவியைப் பெறவும், சிறுநீரக கோளாறு நீங்கவும் நடராஜருக்கு வெட்டிவேர் மாலை சாத்தி வழிபடுகின்றனர். குரு ஓரை வழிபாடு: நினைத்தது நிறைவேற பக்தர்கள், குரு ஓரையில் மூலவர் சிவனுக்கு கொத்துக்கடலை சுண்டல் மாலையிட்டு வழிபடுகின்றனர். துர்க்கை, விஷ்ணு துர்க்கைக்கு எலுமிச்சை மாலை அணிவித்து வழிபட விரைவில் திருமண யோகம் உண்டாகும். திருவிழா: வைகாசி சுவாதியில் தேரோட்டம்.எப்படி செல்வது: திருச்சிசென்னை தேசிய நெடுஞ்சாலையில் 30 கி.மீ., தூரத்தில் பாடாலூர். அங்கிருந்து புள்ளம்பாடி செல்லும் வழியில் 5 கி.மீ.,நேரம்: காலை 7:00 - 12:00 மணி, மாலை 4:00 - 8:00 மணிஅலைபேசி: 97880 62416, 83449 11836