சிவன் கோயிலில் கன்னி அம்மன்
சிவனின் மனைவியான பார்வதி, நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் கோயிலில் கன்னியாக இருக்கிறாள். நீலாயதாட்சி என்னும் பெயர் கொண்ட இவளை நவராத்திரியில் வழிபடுவது சிறப்பு. யமுனை நதிக்கரையிலுள்ள வேத புரத்தில் கருத்தம முனிவர் மனைவியுடன் வசித்து வந்தார். சிவனருளால் அவருக்கு ஆண் குழந்தை பிறக்க, 'புண்டரீகன்' என பெயர் சூட்டினார். 'புண்டரீகன்' என்றால் 'தாமரை போன்ற முகம் கொண்டவன்' என பொருள். சிவனுக்கு நன்றி சொல்லும் விதத்தில் காசி, காஞ்சிபுரம், கும்பகோணம் சிவன் கோயில்களை தரிசித்தார். இருப்பினும் திருப்தி ஏற்படவில்லை. கண்ணுவ முனிவரிடம் சென்று, “என்ன செய்தால் திருப்தி ஏற்படும்?” எனக் கேட்டார். “சிவனை நேரில் தரிசித்தால் மட்டுமே திருப்தி ஏற்படும்'' என்றார் கண்ணுவர். அதனால் நாகப்பட்டினத்தை அடைந்த கருத்தமர் வெட்ட வெளியில் தவமிருந்தார். மழை, வெயில் தாக்கியதால் உடல் புண்ணானது. இருப்பினும் தவத்தை தொடர காட்சியளித்த சிவன் அவரைக் கட்டித் தழுவி காயங்களைப் போக்கினார். காயங்களை ஆற்றியதால் 'காயாரோகணேஸ்வரர்' எனப்பட்டார். முனிவரின் வேண்டுதல்படி இங்கு சிவலிங்கமாக எழுந்தருளினார். காயம்' என்றால் 'உடல்'. 'ஆரோகணம்' என்றால் 'தழுவுதல்'. சிவத்தலமான இங்கு அம்மன் கன்னியாக இருப்பது சிறப்பு. நவராத்திரி சமயத்தில் இவளை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். குழந்தைப்பேறு கிடைக்கும். குடும்ப பிரச்னை விலகும்.இப்பகுதியை ஆண்ட சாலிச மன்னர் நாகையை சுற்றியுள்ள பொய்கைநல்லுார், பொறவாச்சேரி, சிக்கல், பாலுார், வடகுடி, தெத்தி, நாகூர் என்னும் ஊர்களில் சிவபூஜை செய்தார். இதன் பலனாக சிவனின் மணக்கோலத்தை தரிசிக்கும் பேறு பெற்றார்.51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. சிவன் கோயிலாக இருந்தாலும் அம்மனுக்கே முக்கியத்துவம். அம்மன், சிவனை ஒரே நேரத்தில் தரிசிக்கும் விதத்தில் இங்கு நந்தி உள்ளது. காசியைப் போல இங்கும் தியானம் செய்ய முக்தி மண்டபம் உள்ளது. நவக்கிரகங்கள் அனைத்தும் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பு. அயோத்தி மன்னரான தசரதரின் ஆட்சிக் காலத்தில் சனிதோஷத்தால் பஞ்சம் ஏற்பட, சனீஸ்வரருடன் போர் செய்ய முற்பட்டார். மக்களுக்காக போரிட வந்ததைக் கண்ட சனீஸ்வரர் மகிழ்ந்தார். சனி மீது ஸ்தோத்திரம் பாடிய தசரதர் பஞ்சம் நீங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.சனீஸ்வரர், தசரதர் ஒரே சன்னதியில் அருள்புரிகின்றனர்.எப்படி செல்வது: நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ.,விசேஷ நாள்: வைகாசியில் சாலிசுக மன்னனுக்கு சிவன் திருமணக்கோலம், ஆடி ரேவதி முதல் பத்து நாட்கள் அம்மன் தனி விழா, ஆவணி ஆயில்ய நட்சத்திரத்தில் அதிபத்தருக்கு காட்சி கொடுத்தல், நவராத்திரியில் ஒன்பது நாள் அலங்காரம்,நேரம்: காலை 6:00 - 12:30 மணி; மாலை 5:00 - 8:30 மணிதொடர்புக்கு: 04365 - 242 844அருகிலுள்ள தலம்: சவுந்தரராஜ பெருமாள் கோயில் 1 கி.மீ.,