உள்ளூர் செய்திகள்

நல்லவரை கை பிடிக்க வேண்டுமா? மரகதாம்பிகையை வணங்குங்கள்!

சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில், வீற்றிருக்கும் மரகதாம்பிகையை வழிபட்டால் நல்ல வாழ்க்கைத்துணை கிடைக்கும். தல வரலாறு: சூரியனின் மனைவியான சமுக்ஞா தேவி, கணவரின் உக்கிரம் தாங்காமல் தன் நிழல் வடிவை பெண்ணாக்கி விட்டு பிரிந்தாள். சாயா - நிழல் தேவி எனப்பட்ட அவள், சமுக்ஞா தேவியின் பிள்ளைகளிடம் பாரபட்சமாக நடந்தாள். இதன் பின்பே சூரியனுக்கு விஷயம் தெரிய வந்தது. சமுக்ஞாதேவியைத் தேடி புறப்பட்டார். செல்லும் வழியில் பிரம்மா இருந்தார். ஆனால் மனைவியைத் தேடும் அவசரத்தால், அவரை சூரியன் பொருட்படுத்தவில்லை. இதை அவமானமாக கருதிய பிரம்மா, சூரியனை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்தார். இதிலிருந்து விடுபட சூரியன், நாரதரின் உதவியை நாடினார். அவர் இத்தலத்தைச் சுட்டிக்காட்டி, இங்குள்ள வன்னி மரத்தடியில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடும்படி கூறினார். அதன்படியே சூரியன் வழிபட சாப விமோசனம் கிடைத்தது. சூரியனால் வழிபடப்பட்ட சிவனுக்கு 'ரவீஸ்வரர்' என்ற பெயரில் கோயில் கட்டப்பட்டது. ரவி என்றால் 'சூரியன்' என பொருள்.திருமண வரம் தருபவள்: முற்காலத்தில் இங்கு சிவன் சன்னதி மட்டும் இருந்தது. இப்பகுதியை ஆண்ட மன்னன் வீச்சாவரனுக்கு புத்திரப்பேறு இல்லை. சிவனை வழிபட்டான். ஒருநாள் அரண்மனை நந்தவனத்திலுள்ள, மகிழ மரத்தின் அடியில் பெண் குழந்தை கிடைத்தது. அம்பாளே அவனது மகளாக வந்திருப்பதாக அசரீரி ஒலித்தது. குழந்தைக்கு 'மரகதாம்பிகை' என பெயரிட்டான். சிவன், மரகதாம்பிகையை மணம் புரிந்தார். பின்னர் இங்கு அம்மன் சன்னதி எழுப்பப்பட்டது. சிவன்-அம்பிகை திருமண வைபவம் ஆனி மாத பிரம்மோற்ஸவத்தின் போது நடக்கிறது. தெற்கு நோக்கி வீற்றிருக்கும் இவளை, வெள்ளிக்கிழமையில் வழிபட்டால் மனதில் நினைத்த மணவாழ்க்கை அமையும்.தினமும் சூரிய பூஜை: சிவன் சன்னதி கிழக்கு நோக்கி இருந்தாலும், வாசல் இல்லாததால், தெற்கு வாசல் வழியாக செல்ல வேண்டும். சிவன் எதிரிலுள்ள சுவரில், துளை உள்ளது.சூரிய ஒளி துளையின் வழியாக, லிங்கத்தின் மீது விழுகிறது. முன்மண்டபத்தில் சூரியன் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை, உத்தராயண (தை பிறக்கும் நேரம்), தட்சிணாயன புண்ணிய காலம் (ஆடி பிறக்கும் நேரம்) பொங்கல், ரதசப்தமி நாட்களில் சிவனுக்கும் சூரியனுக்கும் பூஜை நடக்கும். சூரிய தோஷம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். மேலே உள்ள இந்திர விமானம் பிடிமானம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இதை கருவறையில் இருந்து பார்க்கலாம்.வியாசர்பாடி: வேத வியாசர் வழிபட்ட தலம் என்பதால் 'வியாசர்பாடி' என பெயர் வந்தது. பவுர்ணமியன்று மாலையில் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள கல்வி வளர்ச்சி உண்டாகும். முனை காத்த பெருமாள்: வியாசர், மகாபாரதக் கதையை சொன்ன போது, விநாயகர் தந்தத்தை உடைத்து எழுதினார். தந்தத்தின் கூரிய முனை, மழுங்கி விடாமல் காத்த, 'முனை காத்த பெருமாளின்' சன்னதி இங்குள்ளது.புரட்டாசி சனிக்கிழமைகளிலும், வைகுண்ட ஏகாதசியன்றும் இவரை கருட வாகனத்தில் தரிசிக்கலாம். பைரவர், நடராஜர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், ஐயப்பன், ஆஞ்சநேயர் ஆகியோருக்கும் சன்னதி உண்டு.எப்படி செல்வது: எழும்பூரில் இருந்து 7 கி.மீ.,விசேஷ நாட்கள்: ஆனியில் பத்து நாள் பிரம்மோற்ஸவம், மகர சங்கராந்தி, மாசி மகம், பங்குனி உத்திரம்.நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 9:00 மணிதொடர்புக்கு: 99418 60986, 044 - 2551 8049.அருகிலுள்ள தலம்: 10 கி.மீ.,ல் சென்னை நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயில்