உள்ளூர் செய்திகள்

அண்ணாமலையார் அடி பணிவோம்

திருவண்ணாமலை  அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை  நடக்கிறது. இதையொட்டி, இந்த தலத்தின் பெருமைகளைத் தெரிந்து கொள்வோமா! தல வரலாறு: பிருங்கி முனிவர் சக்தியை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கி  வந்தார். அவருக்கு, சிவமும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன் அம்பிகையை பிரிவது போல ஒரு லீலை நிகழ்த்தினார். அவள் இத்தலத்தில் அவருடன் மீண்டும் இணைய தவமிருந்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தனது இடது பாகத்தில் ஏற்று, அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார். பிருங்கி உண்மையை உணர்ந்தார். இந்நிகழ்வு ஒரு சிவராத்திரி நாளில் நிகழ்ந்தது. இவ்வாறு சிவன் அர்த்தநாரீஸ்வர வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான  பெருமையை உடைய தலம் இது. பிரம்மாவும், விஷ்ணுவும் நெருப்பாக நின்ற சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற தலம் இது. அந்த நெருப்பே மலையாக மாறியது. அதுவே கோயிலின் பின்னணியிலுள்ள திருவண்ணாமலையாகும். இவரோடு ஒருநாள்: சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, ''ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்'' தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருள்கிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும். பின்பு இந்த தீபத்தை மலைக்கு கொண்டு சென்றுவிடுவர். மாலையில் சிவன், அம்பிகை, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும்கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்தில் எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்திலிருந்து  அர்த்தநாரீஸ்வரர் வருவார். அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும், மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அந்த ஜோதியின் வடிவில் அண்ணாமலையார் காட்சி தருவதாக ஐதீகம். மகா தீபம் ஏற்றும்வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சன்னதியை விட்டுவருவதில்லை. ஜோதி வடிவில் பெருமாள்: பெருமாள் கோயில் களில்வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கும் போது சுவாமி அவ்வாசல் வழியாக வெளியே வருவது வழக்கம். ஆனால், சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். சிவன் சன்னதிக்கு பின்புறம் பாமா, ருக்மணியுடன் வேணுகோபாலர் சன்னதி இருக்கிறது. இவர் அருகில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் இருக்கின்றனர். வைகுண்ட ஏகாதசிஅன்று அதிகாலையில், இவரது சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி பூஜிக்கின்றனர். அதன்பின்பு, அத்தீபத்தை பெருமாளாகக் கருதி, பிரகாரத்திலுள்ள 'வைகுண்ட வாசல்' வழியே கொண்டு வருவர்.  பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால்,  பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச்  சொல்கின்றனர். கம்பத்து இளையனார்: அநேக கோயில்களில் முதலில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி இருக்கும். முழுமுதற்கடவுள் என்பதால் இவரை வணங்கிவிட்டு சன்னதிக்குள் செல்வர். ஆனால், இங்கு முருகன் சன்னதி இருக்கிறது. பக்தர்கள் முதலில் இவரையே வணங்குகிறார்கள். சம்பந்தாண்டான் என்னும்  புலவன், அருணகிரியாரிடம் முருகனை நேரில் காட்டும்படி சொல்லி, அவரது பக்தியை இகழ்ந்தான். அருணகிரியார் முருகனை வேண்டவே, அவர் இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு தூணில் காட்சி தந்தார். இதனால் இவர், 'கம்பத்திளையனார்' (கம்பம் - தூண், இளையனார் - முருகன்) என்று பெயர் பெற்றார். இச்சன்னதிக்கு பின்புறம் 16 கால் மண்டபம் இருக்கிறது. இங்குள்ள வல்லாள மகாராஜா கோபுரத்தின் அடியில் கோபுரத்திளையனார் என்ற பெயரிலும் முருகன் காட்சி தருகிறார்.  அருகில் அருணகிரிநாதர் வணங்கியபடி இருக்கிறார்.  அருணகிரியார் இங்குள்ள கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்விட முயன்றபோது, அவரைக் காப்பாற்றி திருப்புகழ் பாட அருளியவர் இவர். இந்த இரண்டு முருகனின் தரிசனமும் இங்கு மிகவும் விசேஷம். பாதாள லிங்கம்: கோயிலின் முன்பகுதியில் தாழ்வான இடத்தில் ஒரு லிங்கம் இருந்தது.  அதை 'பாதாள லிங்கம்' என்கின்றனர். எதிரில் யோக நந்தி  இருக்கிறது. மரண பயம் நீங்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். நந்திக்கு பெருமை: மாட்டுப்பொங்கலன்று இங்குள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் அனைத்து வகை மலர்களாலான மாலை அணிவித்து பூஜை செய்வர். அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார். தனது வாகனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும்விதமாக சிவன் இவ்வாறு எழுந்தருளுகிறார்.ஆணவம் அடக்கும் பைரவர்: இக்கோயிலின் பிரம்ம தீர்த்தக் கரையில் கால பைரவர் சன்னதி இருக்கிறது. இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர். எட்டு கைகளில் ஆயுதங்கள் எந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார். தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது. ஆணவ குணம் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.நான்கு முக லிங்கம்: பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். பிரம்மா, இங்கு சிவனை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக்கொண்டிருப்பார். இதை உணர்த்தும் விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கங்களிலும், நான்கு முகங்கள் உள்ளன. மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ, இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.செந்தூர விநாயகர்: ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது தெரிந்த விஷயம். ஆனால், இத்தலத்திலுள்ள விநாயகருக்கு செந்தூரம் பூசுகிறார்கள். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்தபோது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக் கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு,  விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்தும் வைபவம் நடக்கும். இவரைத் தவிர யானை திறைகொண்ட விநாயகர் தனிசன்னதியில்  இருக்கிறார்.  அம்பாள் சன்னதி: உண்ணா முலையம்மன், தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளது சன்னதி முன்மண்டபத்தில் உயிர்களின் பாவ, புண்ணியக்கணக்கை எழுதும் சித்ரகுப்தருக்கு சன்னதி இருக்கிறது. அருகில் அவரது உதவியாளரான விசித்ரகுப்தரும் இருக்கிறார். வித்தியாசமான லிங்கங்கள்: சிவன் சன்னதி பிரகாரத்தில் விஸ்வநாதேஸ்வரர், நாரதேஸ்வரர், வைசம்பாதனேஸ்வரர்,  தும்புரேஸ்வரர் என லிங்கங்கள் வரிசையாக இருக்கிறது. சப்தகன்னியர் அருகிலுள்ள ஒரு லிங்கத்தின்பாணத்தில், சிவனின் முகம் இருக்கிறது. பிரம்ம தீர்த்தக்கரையில் நளன்வழிபட்ட நளேஸ்வரர், கல்விச்செல்வம் தரும் வித்யாதரேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.திறக்கும் நேரம்: காலை 5- 12.30மணி, மாலை 3.30- இரவு 9.30 மணி.போன்: 04175-  252 438.