உள்ளூர் செய்திகள்

மனதை வலிமையாக்கும் மகத்தான விரதம்

''ததி சங்க துஷாராபம்க்ஷீரோ தார்ணவ ஸம்பவம்நமாமி சசி நம் ஸோமம்ஸம போர் மகுட பூஷணம்'' என்கிறது ஒரு ஸ்லோகம்.தயிர், சங்கு, பனித்துளிக்கு நிகராக வெண்ணிறம் கொண்ட சந்திரனே! சகல நன்மையும் தரும் சிவனின் செந்நிற சடையில் இருப்பவனே! உன்னைத் தலை வணங்குகிறேன் என்பது இதன் பொருள். சந்திரனுக்கும், சிவனுக்கும் உள்ள தொடர்பை இது விளக்குகிறது. சிவனுக்கு உகந்த கார்த்திகை மாத சோமவாரத்தில் விரதம் இருந்த சந்திரன், அவரது தலையை அலங்கரிக்கும் பாக்கியத்தை பெற்றார். இதனால் சிவபெருமானுக்கு 'பிறைசூடி' எனப் பெயர் ஏற்பட்டது. ஜோதிடத்தில் தாயாரைக் குறிக்கும் கிரகம் சந்திரன். தாயார் நலமுடன் வாழவும், அவரது உறவு பலப்படவும் இந்த விரதம் துணைபுரியும். பிறந்த ஜாதகத்தில் சந்திர திசை, புத்தி நடப்பில் உள்ளவர்களும் இந்த விரதம் மேற்கொள்வர். சிவத்தலங்களில் உள்ள தீர்த்தங்களில் தம்பதியாக நீராடி சிவனை வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். அக்னி பிழம்பான சிவபெருமானை குளிர்விக்க கோயில்களில் சங்காபிஷேகம் செய்கின்றனர். அப்போது 108 அல்லது 1008 வலம்புரி சங்குகளால் அபிஷேகம் செய்வர். அதை தரிசிப்போருக்கு மனவலிமை அதிகரிக்கும். திருமண வைபவத்தில் மணமக்கள் அருந்ததியை பார்க்கும் சடங்கு நடக்கும். கற்புக்கரசியான அருந்ததியை மகரிஷியான வசிஷ்டர் மனைவியாக பெற்றது சோமவார விரத மகிமையால் தான். இந்த விரதமிருப்போருக்கு நல்ல மணவாழ்க்கை அமையும். விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் நீராடி வில்வ இலையால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அதன் பின் பகல் முழுவதும் உண்ணாமல் இருக்க வேண்டும். இந்த ஆண்டு நவம்பர் 22,29 டிசம்பர் 6,13 ஆகிய நாட்களில் கார்த்திகை சோமவாரம் (திங்கட்கிழமை) வருகிறது.