வெற்றி திருநாள்
சும்பன், நிசும்பன், ரத்தபீஜன், மகிஷாசுரன் போன்ற அரக்கர்களை பராசக்தி அழித்த வெற்றித் திருநாள் விஜயதசமி. எப்போதும் உலகில் நன்மைக்கும், தீமைக்கும் இடையே போர் நடக்கிறது. தீயவர்களின் வடிவில் நல்லவர்களுக்கு துன்பம் வரும் போது அதை கல்வி, செல்வம், வீரத்தால் வெற்றி பெற வேண்டும் என்பதே விஜயதசமி உணர்த்தும் உண்மை. உலகம் உருவான காலம் முதல் தீய எண்ணம் கொண்டவர்கள் இருக்கவே செய்கிறார்கள். ஆதிபராசக்தியின் துணை கொண்டு அவர்களை வென்று தர்மத்தை நிலைநாட்ட வேண்டும். தர்மத்தை நிலைநாட்ட, அறச்செயல்கள் செய்திட, நன்மையை சமுதாயத்தில் விதைத்திட கடவுள் துணை கொண்டு அறிவால், செல்வத்தால், ஆற்றலால் வெற்றி பெற வேண்டும். இந்நாளில் குழந்தைகளுக்கு 'வித்யாரம்பம்' என்னும் பள்ளியில் சேர்க்கும் பணியை பெற்றோர் தொடங்குவர். குருகுலக் கல்விமுறை இருந்த காலத்தில் குழந்தைகளுடன் சென்று குருநாதரிடம் ஆசி பெறுவர். பரப்பப்பட்டிருக்கும் நெல்லில் குழந்தையின் ஆட்காட்டி விரல் பிடித்து ''ஓம் நன்றாக குரு வாழ்க! குருவே துணை'' என எழுதச் செய்து கல்வியைத் தொடங்குவார். குருதட்சிணையாக காணிக்கை வழங்குவர். பள்ளிகளில் இந்நாளில் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. விஜயதசமி வெற்றித் திருநாளில் நல்லதை தொடங்குவோம். நாளும் நலம் பெறுவோம்.