கட்டுச்சோறு
தஞ்சாவூரில் இருந்து 20 கி.மீ., துாரத்தில் உள்ளது திருக்காட்டுப்பள்ளி. காவிரியாற்றின் தென்கரையில் உள்ள இத்தலத்தை 'கற்றவர்கள் கருதும் காட்டுப்பள்ளி' எனப் போற்றுகிறது தேவாரம். சிவனை பூஜிக்க விரும்பிய அக்னிதேவன் இங்கு குளம் வெட்டி தீர்த்தம் உருவாக்கினார். இதனால் சுவாமிக்கு 'அக்னீஸ்வரர்', 'தீயாடியப்பர்' எனப் பெயர் வந்தது. அம்மனுக்கு சவுந்தர்யநாயகி என்பது திருநாமம். மாசிமக விழாவிற்கு இங்கிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள 'நாகாச்சி' கிராமத்துக்கு சுவாமியும், அம்மனும் செல்வர். இப்பகுதியை ஆட்சி செய்த சிற்றரசன் நாகன் பக்தியுடன் அம்மனுக்கு சிலை செய்து கொடுத்ததால், அந்த கிராமமே அம்மனின் பிறந்த ஊராக கருதப்படுகிறது. இதனடிப்படையில் மாசிமகத்தன்று இவ்வூரில் இருந்து பிறந்த வீட்டு சீதனம் அனுப்பப்படுகிறது. திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் போது பசித்தால் சாப்பிட கட்டுச்சோறும் தரப்படுகிறது.