அழகெல்லாம் முருகனே!
அழகை விரும்பாதவர்கள் யாருமில்லை. பச்சைப் புல்வெளி கண்களுக்கு அழகு சேர்க்கிறது. அருவியின் குளிர்ச்சாரல் கண்ணுக்கும், மனதுக்கும் களிப்பூட்டுகிறது. நந்தவனத்தின் மெல்லிய பூங்காற்றும், பூத்துக்குலுங்கும் வாசனை மலர்களும் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கின்றன. இப்படி இயற்கை அழகு எல்லாம் ஒன்று திரண்ட பேரழகன் மன்மதன். இவனுக்கு 'மாரன்' என்ற பெயருண்டு. இந்த மன்மதனை போல ஆயிரம் மடங்கு அழகு மிக்கவன் முருகன்.முருகனின் அழகின் முன் மன்மதனின் அழகு ஏளனப் பொருளாகி விட்டதாம். இதனால் முருகனுக்கு 'குமாரன்' என்ற பெயர் உண்டானது. 'கு' என்பது 'அதிகப்படியான' என்ற பொருளில் இங்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மாரன் (மன்மதன்) கருமை நிறம் கொண்டவன். அதனால் மன்மதனை கருவேள் என்பர். குமாரன் (முருகன்) சிவந்த நிறமுடையவன் என்பதால் செவ்வேள் என்பர். ஆயிரம் கோடி மன்மதனின் அழகெல்லாம் ஒன்று சேர்ந்தது போல முருகன் திகழ்வதாக கந்தபுராணம் கூறுகிறது.