உள்ளூர் செய்திகள்

பாலவிகாஸ் கல்வி

குழந்தைகளின் ஆளுமைத் தன்மையை வளர்க்க, பாலவிகாஸ் கல்வித் திட்டத்தை பகவான் சத்ய சாய்பாபா ஏற்படுத்தினார். தற்போது உள்ள கல்வித் திட்டத்தில் ஆன்மிக பண்புகள் வளர்வதற்கான வழிமுறைகள் குறைவு. இதற்கு தீர்வு காணும் வகையில் இந்தக் கல்வித் திட்டம் உருவானது. இதற்காக 1969ல் 'ஸ்ரீ சத்யசாய் பாலவிகார்' என்ற அமைப்பை உருவாக்கினார். இதில் சேரும் மாணவர்கள் ஒன்பது ஆண்டுகள் தங்களின் வார விடுமுறை நாட்களில் படிக்க வேண்டும். பெண் ஆசிரியைகள் மூலம் கதைகள், நாடகங்கள், பாடல்கள் வாயிலாக நல்ல பண்புகள் கற்றுத் தரப்படுகின்றன. ராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை மட்டுமின்றி மற்ற மத நுால்களில் இருந்தும் கதைகள், நீதிகள் எடுத்துச் சொல்லப்படுகின்றன. 1971ல் 'பால விகாஸ் குழந்தைகள் மலர்ச்சி' என்ற அமைப்பு உருவானது. 'பால' என்றால் குழந்தை, 'விகாஸ்' என்றால் மலர்தல். உடல், மனம், புத்தி, ஆன்மிக வளர்ச்சி ஆகியவை இந்தக் கல்வித் திட்டத்தின் நோக்கம். 6 வயது முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகளை மூன்றாக பிரித்து பாடம் நடத்தப்படுகிறது. படிப்பின் மீது ஆர்வத்தை முதல் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும், பெற்றோர், பெரியவர்களிடம் மரியாதையை இரண்டாவது பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும் உண்டாக்குகின்றனர். மூன்றாவது பிரிவு மாணவர்களுக்கு முகாம், கருத்தரங்குகள் நடத்துகின்றனர். 1977ல் நடந்த அகில இந்திய மாநாட்டில் பேசிய பகவான் சத்ய சாய்பாபா பால விகாஸ் ஆசிரியர்களிடம், 'ஆசைகளுக்கு ஒரு வரையறை' என்னும் திட்டத்தை பின்பற்றும்படி அறிவுறுத்தினார். மாணவர்களும் இதைக் கடைபிடிக்கத் துாண்டும்படி சொன்னார். அகிம்சையை கடைபிடிப்பதன் மூலம் தீவிரவாதத்தை தடுக்க முடியும் என்றும், பேராசை ஒழியும் போது தானாகவே அகிம்சை ஏற்படும் என்றும் கூறினார். 1985 வரை பக்தர்களின் குடும்பத்திலுள்ள குழந்தைகள் மட்டும் இந்த வகுப்புகளில் சேர்ந்தனர். இதன்பின் ஸ்ரீசத்யசாயி தேசிய கல்வி நிர்வாக சபை உருவாக்கப்பட்டு அனைவரும் பங்கேற்றனர். இதில் 16 மாநிலங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு மனித மேம்பாட்டுக் கல்வி வழங்கப்பட்டது. தாய்லாந்து, டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளின் ஆசிரியர்களும் இந்த கல்விமுறையை ஏற்றுக் கொண்டனர். பிறகு ஸ்ரீசத்யசாயி விழுக்கல்வியாக இது மலர்ந்தது. 'விழுக்கல்வி' என்பது தெய்வீகத்தை தந்து, துன்பத்தை போக்குவதாகும். 'உள்ளே இருப்பது எதுவோ, அதனை வெளிக்கொணர்வதே விழுக்கல்வி' என இது பற்றிக் குறிப்பிட்டார். ''ஒரு மனிதன் மனமாற்றம் அடைய வேண்டுமானால் நல்ல எண்ணத்தை வளர்க்க வேண்டும். நல்ல எண்ணத்தை விதைத்தால், நற்செயல் என்ற விளைச்சலைப் பெறலாம். நற்செயல் என்ற விதையை விதைத்தால் நல்ல பழக்கம் என்ற விளைச்சலைப் பெறலாம். நல்ல பழக்கம் என்ற விதையை விதைத்தால் நல்லொழுக்கம் என்ற விளைச்சலைப் பெறலாம். நல்லொழுக்கம் என்ற விதையை விதைத்தால் நல்ல விதி என்ற விளைச்சல் கிடைக்கும்'' என்றார். கடவுள் பக்தி, கவனமாக அறியும் திறன், கட்டுப்பாடு, சுய ஒழுக்கம், மனஉறுதி, கடமை ஆகிய நல்ல பண்புகளை நடைமுறைபடுத்தினால் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.