உள்ளூர் செய்திகள்

மனசுக்கு பிடிச்ச மச்சான்

ஆறுபடைவீடுகளில் கடற்கரையோரத்தில் அமைந்த தலம் திருச்செந்துார். இங்கு வாழும் பரதவர் குலமக்கள் முருகனை 'மச்சான்' (மாப்பிள்ளை) உறவாகக் கருதுகின்றனர். முருகனை மணந்த தெய்வானை பரதவ குலத்தில் பிறந்தவள் என்றும், அவள் கன்னியாகுமரி பகுதியை ஆண்ட மச்சேந்திரனின் மகள் என்றும், தெய்வானையின் அழகில் மனம் பறி கொடுத்த முருகன் அவளைக் கடத்தி வந்து திருமணம் செய்ததாகவும் ஒரு வரலாறு உண்டு. இது பரதவ குல பாண்டிய வம்ச சரித்திரத்தில் உள்ளது. இதனடிப்படையில் கடலுக்குள் செல்லும் போது திருச்செந்துார் கோயிலுக்கு நேராக படகை நிறுத்தி தேங்காய் உடைத்து வழிபடுகின்றனர்.