உள்ளூர் செய்திகள்

அக்னி நட்சத்திரம்

மே 4 - 28, 2024 யமுனை ஆற்றங்கரையில் உள்ளது காண்டவ வனம். இங்கு அரியவகை மூலிகைகள் வளர்ந்திருந்தன. இங்கு அடிக்கடி மழை பெய்யச் செய்தார் அதன் அதிபதியான இந்திரன். ஒருசமயம் பகவான் கிருஷ்ணரும், அர்ஜூனனும் நீராடச் சென்றனர்.அவர்களிடம் அந்தணர் ஒருவர், 'எனக்கு அகோர பசி. அதைத் தீர்க்கும் மூலிகை இங்கு உண்டாமே...அதை பறிக்க வழிகாட்டுங்கள்' என்றார். வந்திருப்பது யார் என்பதை தெரிந்து கொண்டார் மாயம் செய்வதில் வல்லவரான கிருஷ்ணர்.உடனே அந்தணர் வடிவில் இருந்த அக்னி தன் உண்மை வடிவைக் காட்டி, 'சுவேதசி மன்னருக்காக துர்வாச முனிவர் யாகம் நடத்தினார். அதில் இடப்பட்ட நெய்யை பருகியதால் தீராத பசிக்கு ஆளாகி விட்டேன். அதை சரி செய்யும் மூலிகை இங்குள்ளது. அதை பறிக்க வரும் போதெல்லாம் இந்திரன் மழையை பெய்யச் செய்வதால் என்னால் செயல்பட முடியவில்லை. நீங்கள் தான் உதவ வேண்டும்' என கிருஷ்ணரிடம் வேண்டினார் அக்னி. பகவான் கிருஷ்ணர் தன் விசேஷ ஆற்றலால் 21 நாட்கள் மழையை தடுத்து நிறுத்தினார். அங்கிருந்த மூலிகைகளை சாப்பிட்டு நோய் நீங்கப் பெற்றார் அக்னி. அந்த 21 நாட்களே அக்னி நட்சத்திர காலம் எனப்படுகிறது. பரணி 3ம் பாதத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலமான அக்னி நட்சத்திரத்தில் (சித்திரை 21- வைகாசி 14) வரையுள்ள நாட்களில் வெயிலின் தாக்கம் இருக்கும். இக்காலங்களில்... * தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். * பதநீர், இளநீர், பானகம், நீராகாரம் குடியுங்கள். * நீர்ச்சத்துள்ள காய்கறி, பழங்களை உணவாக சாப்பிடுங்கள். * கதர், பருத்தி ஆடைகளை உடுத்துங்கள் * தினமும் இரண்டு முறை குளியுங்கள். * செருப்பு, குடை தானம் செய்யுங்கள்.* விலங்கு, பறவைகளின் தாகம் தீர தண்ணீர் வையுங்கள்.