பானு சப்தமி
பானு என்றால் சூரியன். இந்த கிரகத்துக்கு உரிய கிழமை ஞாயிறு. திதி சப்தமி. ஞாயிற்றுக்கிழமையும், சப்தமி திதியும் ஒன்றுசேரும் நாளை 'பானு சப்தமி' என்பர். இந்த நாள் சூரியகிரகண நாளுக்கு சமமானது. இந்த நாளில் சூரியகிரகணம் முடிந்ததும் செய்வது போல புனிதத் தீர்த்தங்களில் நீராடலாம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். இன்று வழங்கப்படும் தானம், ஆயிரம் மடங்கு பலன் தரும். இந்த நாளில் கோதுமை மாவில் செய்த இனிப்பு பண்டங்களை சூரியன் உதயமாகும் நேரத்தில், வெட்ட வெளியில், மொட்டை மாடியில் வைத்து நிவேதனம் செய்யலாம். இந்நாளில் சூரியனை நினைத்து விரதம் இருந்தால், நீண்ட நாட்களாக சுகமில்லாமல் இருக்கும் தந்தை, கணவர், மனைவிக்கு உடல்நிலை சுகமாகும். கண்கோளாறு நீங்கும். உயர்ந்த பதவி கிடைக்கும். பங்குனி 6ல் (மார்ச்19) இந்த விரதம் வருகிறது. இந்நாளில் தவறாமல் சூரிய வழிபாடு செய்யுங்கள்.