உள்ளூர் செய்திகள்

நினைத்ததை நடத்திடுவாய் கோவிந்தா!

பண்ணையார் வீட்டில் கூலி வேலை செய்தான் கோவிந்தன். அவனுக்கு திருப்பதி ஏழுமலையான் தான் இஷ்ட தெய்வம். புரட்டாசி விரதமிருக்க அவன் தவறியதில்லை. பண்ணையார் குடும்பத்துடன் அடிக்கடி திருப்பதி செல்வார். வந்ததும் கோவிந்தனிடம் பிரசாதத்தை கொடுப்பார். அதில் நாமக்கட்டிகள் இருக்கும். தினமும் நாமம் இட்டுக் கொள்வான். ஒருநாள், '' என் வாழ்நாளுக்குள் ஒருமுறை உன்னை தரிசிக்கிற பாக்கியம் வேணும்! நடந்தே கூட வருகிறேன். ஆனால் பண்ணையார் கொடுக்கிற கூலி போய்விட்டால் என் குடும்பம் பசியில் வாடுமே! எனக்கு நீ தான் வழி காட்டணும்'' என வேண்டினான். புரட்டாசி மாதம் பிறந்தது. விரதமிருக்க ஆரம்பித்த கோவிந்தன் பெருமாள் கோயிலுக்குச் சென்றான். அங்கு நடந்த உபன்யாசத்தை கேட்டான். உபன்யாசகர், ''திருப்பதி மலையடிவாரத்தில் வசித்த எறும்புக்கு ஏழுமலையானைத் தரிசிக்க ஆசை ஏற்பட்டது. ஆனால் நம்மால் முடியாது என வருத்தப்பட்டது. அப்போது சிங்கம் ஒன்று தன் சகாவிடம் மலையின் உச்சிக்கு தான் செல்லப் போவது பற்றி சொல்லிக் கொண்டிருந்தது. சிங்கத்தின் பிடரியின் மீது ஏறிக் கொண்டது எறும்பு. ஏழுமலையை கடந்ததும் எறும்பு கீழே இறங்கியது. ஏழுமலையானை தரிசித்தது. இந்த எறும்பு போல யார் வேண்டினாலும் தரிசிக்கும் பாக்கியத்தை ஏழுமலையான் கொடுப்பான்'' என்றார். தனக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என வேண்டியபடி புறப்பட்டான். அடுத்த வாரமே கோவிந்தனிடம், ''புரட்டாசி சனியன்று நாம திருப்பதியில இருக்கணும். நீ என் கூட வா!'' என்றார். பண்ணையாரின் பேச்சு கோவிந்தனின் காதில் தேனாகப் பாய்ந்தது.