முகத்தைப் பார்த்து குறி சொல்பவர்
பிறரது முகக்குறிப்பைக் கொண்டே அவர்களின் குணநலன் இப்படி என்று கண்டுபிடிப்பது ஒரு கலை. அந்தக் கலைக்குச் சொந்தக்காரர் அனுமன். அவரது புத்திக் கூர்மையை தன்னுடைய முதல் சந்திப்பிலேயே அறிந்து கொண்டவர் ராமபிரான். ராமனும், லட்சுமணனும் அனுமனை முதலில் அணுகினர். அனுமன் அவ்விருவரையும் கூர்ந்து நோக்கி, “முரண்பாடு உடைய நீங்கள் யார்? என்ன நோக்கத்துடன் இங்கே வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். லட்சுமணன் அனுமனைப் பார்த்து, “எங்களிடம் நீ காணும் முரண்பாடு என்ன?”ஆஞ்சநேயர் ராமலட்சுமணர்களைப் பார்த்து, “உங்களைப் பார்த்தால் தேவர்கள் போல் தோன்றுகிறது. ஆனால், உங்கள் பாதங்கள் இரண்டும் பூமியில் படிகின்றன. பார்ப்பதற்கு தவசிகள் போல் தோன்றும் நீங்கள், கையில் ஆயுதங்களை ஏந்தி நிற்கிறீர்கள். ஞானிகள் போல தோன்றினாலும், துன்பத்தில் மூழ்கி இருக்கிறீர்கள். நீங்கள் இழந்து விட்ட ஏதோ ஒரு பொருளைத் தேடுபவர்கள் போல காட்சி அளிக்கிறீர்கள். இவையே உங்களிடத்தில் நான் கண்ட முரண்பாடுகள். அனுமனின் உரையாடலைக் கேட்ட ராமன், “இவன் ஞானம் கொண்டவன். இவனோடு நட்புக் கொள்வது நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,” என்று கூறி தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டார்.