உள்ளூர் செய்திகள்

கொலு வைக்க தயாராவோமா!

கொலு வைப்பதன் காரணம்!செப்.28ல், நவராத்திரி ஆரம்பமாகிறது. இதையொட்டி கொலு வைக்க தயாராகி வருவீர்கள். நவராத்திரி வந்தால் கொலு வைக்க வேண்டும், சுண்டல் நைவேத்யம் செய்ய வேண்டும், வீட்டுக்கு வருபவர்களுக்கு பிரசாதம் கொடுக்க வேண்டும் என்ற விஷயமெல்லாம் நமக்கு அத்துப்படி. ஆனால், ஏன் கொ<லு வைக்க வேண்டும் தெரியுமா? பலவகை பொம்மைகளை அடுக்குகிறோமே, அதற்கான ஆன்மிக காரணத்தை தெரிந்து வைத்திருக்கிறீர்களா? தெரிந்து கொண்டால் நெகிழ்ந்து போவீர்கள்!தேவி ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள். 'யாதுமாகி நின்றாய் காளி' என்று தேவியே இந்த உலகமாக இருக்கிறாள் என்கிறார் பாரதியார். புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி, மனிதர் என்று எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி. ஆக, அனைத்து உயிர்களிலும், பொருள்களிலும் அவளைக் காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம். இதனால்தான் கொலுவிற்கு 'சிவை ஜோடிப்பு' என்றும் பெயருண்டு. 'சிவை' என்றால் 'சக்தி'. சக்தியின் வடிவே பொம்மை அலங்காரமாகச் செய்யப்படுகிறது. எனவே, கொலு வைத்தால் மட்டும் போதாது. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். கொலு மேடைக்கு பூஜை செய்வது எப்படி?நூல் சுற்றிய கும்பத்தில் (குடம்) பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், ஒரு ரூபாய் காசு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட வேண்டும். குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை சூட்டி அதன் மீது வைக்க வேண்டும். சுற்றிலும் மாவிலைகளை அடுக்க வேண்டும். கொலுமேடை முன்பு மேஜையிட்டு அதில் கும்பத்தை வைக்க வேண்டும். அதை அம்பாளாக நினைத்து, தினமும் காலை, மாலையில் பூஜை செய்ய வேண்டும்.பொம்மைகளை அடுக்கும் முறைமனிதனாகப் பிறந்தவன் படிப்படியாக தனது குணநலனை மாற்றி, தெய்வநிலைக்கு உயர வேண்டும். இந்த தத்துவத்தின் அடிப்படையில் ஒன்பது படிகளில் கொலு பொம்மைகளை அடுக்குவது மரபு. கொலு வைக்கும் முன் வீட்டை சுத்தமாக்கி, அழகிய கோலம் போடவேண்டும். கொலு மேடையின் உயரம் கைக்கெட்டும் அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது. கீழிருந்து மேலாக படிகளில் பொம்மைகளை அடுக்க வேண்டும். முன்னரெல்லாம் களிமண்ணால் செய்யப்பட்ட எறும்பு, புழு உள்ளிட்ட பொம்மைகளைக் கூட தங்கள் கையாலேயே செய்து வைத்தனர். இப்போது கடைகளில் கிடைக்கும் பொம்மைகளையே வைப்பதால், அழகுக்கு தரும் முக்கியத்துவம் ஆன்மிகத்துக்கு தரப்படுவதில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது. இந்த ஆண்டில் இருந்தாவது, எந்தெந்த படிகளில் என்னென்ன பொம்மைகள் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து செய்யலாமே!