உள்ளூர் செய்திகள்

நல்ல வார்த்தை நாலஞ்சு! (15)

நாட்டில் நல்ல வார்த்தைகள் காதில் விழுவது என்பது ரொம்பவே குறைந்து விட்ட காலம் இது. இந்த சமயத்தில், ஏதோ நாலஞ்சு நல்ல வார்த்தைகளை உங்கள் காதில் போட்டு வைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம் பஞ்ச ''வ''காரங்கள் என்று சொல்வார்கள். 'வ' என்ற எழுத்தையும், அதைச் சேர்ந்த எழுத்துக்களையும் நினைத்துப் பாருங்கள். அந்தாக்ஷரி விளையாடும் பொழுது, 'வ' வில் ஒரு வார்த்தை சொல்ல வேண்டுமானால், 'வெற்றி' என்ற வார்த்தை கட்டாயம் இடம்பெறும். ஏனென்றால், சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோருமே வாழ்க்கையில் வெற்றி பெற கடும் முயற்சி செய்கிறார்கள். ஆங்கிலத்தில் ''வி'' என்ற எழுத்தை நன்கு புரிந்துகொள்ளுவதற்கு ''வி'' என்பது ''விக்டரி'' என்ற வார்த்தையின் முதல் எழுத்து என்று விளக்குவர்.சமஸ்கிருதத்திலும், நம் வாழ்க்கையில் மதிப்பும் அதன் மூலம் வெற்றி பெற ஐந்து ''வ'' காரங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது 'ஐந்து வார்த்தைகள்'. இந்த வார்த்தைகளை நாம் வாழ்க்கையில் கடைபிடிப்பது அவசியம் என்று நமக்கு ஒரு ஸுபாஷிதம் (நல்ல வார்த்தைகள் கொண்ட ஸ்லோகம்) மூலம் தெரியப்படுத்தப்படுகிறது. இந்த ஸுபாஷிததை பார்ப்போமா ?வஸ்த்ரேண வபுஷா வாசா வித்யா விநயேன ச! வகாரை: பஞ்சபிர்ஹீன: நரோ நாயாதி கவ்ரவம்!!இதன் விளக்கம் என்ன?குறிப்பிட்ட ஐந்து குணாதிசயங்கள் உள்ள மனிதர்கள், மரியாதைக்குரியவர்களாகவும், போற்றத்தக்கவர்களாகவும், வணங்கத்தக்கவர்களாகவும் கருதப்படுகிறார்கள். அந்தச் சிறப்பியல்புகள் என்னென்ன?வஸ்த்ரா, வபுஷா, வாசா, வித்யா, மற்றும் விநயா ஆகும். * முதல் ''வ''காரம் ''வஸ்த்ரா'' ஆகும். நல்ல உடை அணிந்தவர்களை சமூகம் மதிக்கிறது. சூழ்நிலைக்கேற்ப நல்ல ஆடை அணிகளை அணிந்தவர்களை மற்றவர் திரும்பிப் பார்க்கின்றனர். ''ஆள் பாதி, ஆடை பாதி'' என்று நம் பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறோமே? நம்முடைய தனித்தன்மையை நிலைநாட்ட நம்முடைய 'வஸ்த்ரம்' மிக முக்கியமான இடத்தை பிடிக்கிறது. நம் பெரியவர்கள் ஆடையின் மதிப்பை விளக்குவதற்காக நமக்கு உரைத்த ஒரு விஷயம் இங்கே நினைவிற்கு வருகிறது.பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடையும் பொழுது, பிரகாசமான மஞ்சள் வண்ண ஆடை அணிந்த விஷ்ணுவிற்கு, சமுத்திரராஜா தன்னுடைய மகளான லட்சுமியை அளித்தார் என்று சொல்வார்கள். அதற்காக, நாம் அணியும் ஆடைகள் விலை மதிப்புள்ளதாக இருக்கவேண்டும் என்று இல்லை. சீரான, நேர்த்தியான, நற்பண்பை வெளிப்படுத்தும் ஆடைகள் மற்றவர் கவனத்தைக் கவரும் என்பது உறுதி.* இரண்டாவது 'வபுஷா'. வபுஷா என்றால், நல்ல உடலமைப்புக் கொண்டவர். அழிவற்ற ஆத்மா குடிகொண்டிருக்கும் இந்த உடலை ஒரு கோயிலாகக் கருதி, நன்கு பேணிக் காக்கும் மனிதர்கள், 'உண்மையை' அறிந்தவர்கள் ஆவர். சாத்வீகமான உணவை உண்டு, தவிர்க்க வேண்டிய விஷயங்களைத் தவிர்த்து, உடலை கட்டுக்கோப்புடன், ஒழுக்கத்துடன் காக்கும் மனிதர்களின் முகத்தில் ஒரு வசீகரத்தையும், பிரகாசத்தையும் நாம் எப்பொழுதும் காணலாம். அவர்களுடன் நட்பு கொள்ளவேண்டும் என்ற உணர்ச்சி பெருகுவதை உணரலாம். - தொடரும்சித்ரா நாராயணன்