நல்ல வார்த்தை நாலஞ்சு! (17)
நாட்டில் நல்ல வார்த்தைகள் காதில் விழுவது என்பது ரொம்பவே குறைந்து விட்ட காலம் இது. இந்த சமயத்தில், ஏதோ நாலஞ்சு நல்ல வார்த்தைகளை உங்கள் காதில் போட்டு வைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம் ''தனம், தான்யம், ஆரோக்கியம், ஸத்புத்ரலாபம் ........ ச ப்ராப்தி ரஸ்து'' என்று ஒரு ஸ்லோகம் இருக்கிறது. இதன் விளக்கத்தைப் பார்ப்போமே!வாழ்க்கையில் நமக்கு எவ்வளவு தேவைகள் இருக்கின்றன. அவற்றை தார்மிக முறையில் அடைய கோயில்களுக்குச் செல்கிறோம்; தார்மீகக் காரியங்கள் செய்கிறோம். பரோபகாரங்கள் (உதவி) செய்கிறோம். எவ்வளவு சுகங்கள் இருந்தாலும், நம் மனதில் ஏதாவது குறை இருந்து கொண்டே இருக்கிறது, அல்லது திடீர் என்று உடல் நிலை சரியில்லாமல் ஆகிவிடுகிறது. அப்பொழுது நாம் சுறுசுறுப்பாக இருக்க முடிவதில்லை; அல்லது எனக்கு ஒரு நாளில் 24 மணி நேரம் போதவில்லை, என்று புகார் செய்கிறோமே. இவை எல்லாவற்றிற்கும் எப்படி ஒரு தீர்வு காண்பது?எப்படி பணம், படிப்பு, நோயற்ற வாழ்வு உள்ளிட்ட எல்லா செல்வங்களையும் பெற்று எப்படி ஒரு நிம்மதியான வாழ்வைப் பெற முடியும்? இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? எந்த மூலிகைகளை, மருந்துகளை நாம் சாப்பிடவேண்டும்?நியாயமான கேள்விதான். நமக்கு அலுவலகத்தில் ஒரு சந்தேகம் ஏற்பட்டால் என்ன செய்கிறோம்? நம்முடைய உயர் அதிகாரியை கலந்து ஆலோசிக்கிறோம், அல்லது அவருடைய கருத்துக்களை தெரிந்து கொள்கிறோம். ''எதைத் தின்றால் பித்தம் தெளியும்'' என்று நாமே நம்முடைய கேள்விக்கு பதிலைத் தேடவேண்டுமா, அல்லது நம்முடைய அதிகாரியைத் தேடி ஆலோசனை பெற்றுக்கொள்ளுவது நல்லதா? நம் கேள்வியைக் எந்த அதிகாரியிடம் கேட்க முடியும்? அவரை எப்படி அடைந்து, கேட்டுத் தெரிந்து கொள்வது?நம்முடைய அதிகாரி நம்முடைய தெய்வம் தானே! நம்முடைய வேதங்களிலும், புராணங்களிலும், சாஸ்திரங்களிலும் நம்முடைய வினாக்களுக்கு கிடைக்காத அல்லது இல்லாத பதிலா? நம் சொந்தக் கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு, உலகம் முழுக்க சுற்ற வேண்டிய அவசியம் இருக்கிறதா என்ன? நேரத்திற்கு படுக்கச் சென்று, விடி காலையில் விழித்தெழும் மனிதன் ஆரோக்கியமானவனாக வும், செல்வங்கள் நிறைந்தவனாகவும். அறிவுள்ளவனாகவும் திகழ்கிறான் என்று பல முறை நாம் கேட்டிருக்கிறோம், மற்றவர்களுக்கும் சொல்லி இருக்கிறோம். ஆனால், நாம் நடைமுறையில் இந்த வாக்கைப் பின்பற்றுகிறோமா என்பதை நாமே நம்மைக் கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி.காலையில் எழுந்து, அலாரம் அடித்தவுடன் இன்னும் ஒரு பத்து நிமிடங்கள் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து, உறக்கத்தை தொடர்ந்தால், நாம் மேற்கூறிய ஆன்மிகச் சிந்தனையை திரும்பி மனதில் கொண்டு வரவேண்டிய நிலையை அடைகிறோம். அந்த பத்து நிமிட மேல் தூக்கம், நம்மை ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் கூட படுக்கையில் கிடத்தி விடும். குளிக்காமல் கூட அலுவலகத் திற்கோ, பள்ளிக்கூடத்திற்கோ ஓட வேண்டிய நிலைமைக்குத் தள்ளும். 'பளிச்' என்று ஒளி வீசி மற்றவர்களைக் கவர வேண்டிய முகத்தில், அசட்டுத்தனமும், வாயில் கொட்டாவிகளும் தான் நமக்கு மிஞ்சும். நம்முடைய காரியங்கள், கடமைகளை மனம் கொடுத்து செய்ய முடியாமல் போய் விடும்.எனவே, நாம் எது செய்தாலும், சரியான நேரம் பார்த்து செய்ய வேண்டும் என்பது நம்முடைய முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும், இதை யாரும் எப்போதும் மறந்து விட வேண்டாம்.சித்ரா நாராயணன்