அவரை புரிஞ்சுக்கவே முடியாது - வியக்கிறார் பெரியவர்
பிரம்மத்துக்கு(கடவுளுக்கு) காரியம் (நம்மால் ஆக வேண்டியது)இல்லை. ஆனால், இந்த மாய உலகத்தில் அகப்பட்டுக் கொண்டு காரியங்களைச் செய்து வருகிறவர்கள், ஈஸ்வரன் என்ற ஒருவனைப் பூஜை செய்து, தங்கள் காரியங்களை நடத்தித் தரவேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள். நல்ல காரியங்களுக்காக நல்ல மனசோடு பிரார்த்தித்தால் ஈஸ்வரனும் அவற்றை நடத்தித் தருகிறார். இதிலிருந்து ஈஸ்வரன் காரியமே இல்லாமல் இருப்பவரல்ல என்றும் தெரிகிறது. நாம் பிரார்த்தித்தாலும், பிரார்த்திக்காவிட்டாலும் சகல பிரபஞ்சங்களையும் இத்தனை ஒழுங்கான கதியில் நடத்திக் கொண்டு, சகல ஜீவராசிகளுக்கும் சோறு போடுகிற பெரிய காரியத்தை அவர் செய்கிறாரே! காரியம் செய்யாத நிலையில் பிரம்மமாகவும், லோக காரியங்களை நிர்வகிக்கிற நிலையில் ஈஸ்வரனாகவும்இருக்கிறார். சிவனின் தட்சிணாமூர்த்திக்கோலம் பிரம்ம நிலையைக் காட்டுகிறது. அங்கே காரியமே இல்லை. ஒரே மவுனம் தான். அதே பரமசிவன் எத்தனை காரியங்களைச் செய்திருக்கிறார்! சிதம்பரத்தில் ஒரேயடியாகக் கூத்தடிக்கிறார். தாருகாவனத்தில் பிட்சாடன னாக அலைந்து மோகிக்கச் செய்திருக்கிறார். சுவாமி எப்போதும் உள்ளே அடங்கிய பிரம்மமாகவும் இருக்கிறார். வெளியில் சகலகாரியங்களையும் செய்யும் நிலையில் ஈஸ்வரனாகவும் இருக்கிறார். அவரை யாரால் புரிந்து கொள்ள முடியும்!