வீட்டில் சரஸ்வதி பூஜை செய்வது எப்படி?
UPDATED : செப் 22, 2017 | ADDED : செப் 22, 2017
செப். 29 - சரஸ்வதி பூஜைசரஸ்வதி பூஜையன்று அதிகாலை 5:30 மணிக்குள் வீட்டை சுத்தம் செய்து, நீராடுவதை முடித்து விட வேண்டும். சரஸ்வதி தொடர்பான பாடல்கள், ஸ்லோகங்களை குடும்பத்துடன் சேர்ந்து படிக்க வேண்டும்.ஒற்றைக்கரையுடன் கூடிய வெள்ளைப் புடவையை கொசுவம் வைத்து மடித்து, அந்த கொசுவத்தின் மேல் பகுதியை சிறு கயிற்றால் கட்டி, ஒரு மேஜையின் மேற்பகுதியை மறைக்கும் விதத்தில் விரித்து விட வேண்டும். அதன் மீது புத்தகங்களை அடுக்க வேண்டும். அந்த புத்தகங்களின் மீது சரஸ்வதி படம் அல்லது மஞ்சளில் பிடித்த சரஸ்வதி முகத்தை வைக்க வேண்டும். அதற்கு மாலை சூட்ட வேண்டும்.மேஜையின் முன்னால், 'டீ பாய்' அளவு உயரமுள்ள பலகை இட்டு, அதில் வாழை இலையை விரிக்க வேண்டும். அதில் சாண உருண்டையை விநாயகராகவும், செம்மண் உருண்டையை அம்பிகையாகவும் கருதி வைக்க வேண்டும். சாண விநாயகர் மீது அருகம்புல் தூவியும், செம்மண் அம்மன் மீது உதிரி செவ்வரளி பூக்களைத் தூவியும் அலங்காரம் செய்ய வேண்டும்.இலையில் பொரி, பொரிகடலை, அவல், கொண்டைக்கடலை சுண்டல், கடலைப்பருப்பு சுண்டல், பழங்கள், சர்க்கரைப் பொங்கல், காதரிசி(ஊற வைத்த பச்சரிசியுடன் வெல்லம் கலந்து அதனுடன் வாழைப்பழம் சேர்த்து பிசைந்தது) ஆகியவற்றை படைக்க வேண்டும். பின் சாம்பிராணி, பத்தி, நெய் தீபம் அல்லது கற்பூர ஆராதனை செய்ய வேண்டும். மதியம் குழந்தைகளுக்கு அன்னதானம் செய்வது நல்லது. மாலை 6:00 மணிக்கு இன்னொரு இலை விரித்து பொரி, கடலை, அவல் படைத்து திருவிளக்கேற்றி சரஸ்வதி குறித்த பாடல்களைப் பாட வேண்டும். மறுநாள் காலை 6:00 மணிக்கு இலையில் பொரி, கடலை வைத்து பூஜை செய்து அலங்காரத்தை கலைத்து விடலாம். மஞ்சள் முகம் வைத்து வணங்கியவர்கள் அதை ஆறு, குளங்களில் கரைக்க வேண்டும். வசதிப்படாவிட்டால், அதை நீரில் கரைத்து செடிகளில் ஊற்றலாம்.