உள்ளூர் செய்திகள்

தடையும் நானே! விடையும் நானே! இரட்டை பிள்ளையார் தத்துவம்!

ஒரே சந்நிதியில் இரட்டையாக விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடும் வழக்கம் காலங்காலமாகவே இருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அம்மன் சந்நிதியின் இடதுபுறமும், பிரகாரத்திலும் இரட்டை பிள்ளையார் உள்ளனர். 'இரட்டைப்பிள்ளையார் கோயில் தெரு' என்று கூட சில ஊர்களில் தெருக்களுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. விநாயகரைத் தவிர வேறெந்த தெய்வத்திற்கும் இப்படி வழிபாடு செய்யும் வழக்கம் இல்லை. இந்த இருவரில் ஒருவர் விக்னராஜர்... மற்றொருவர் விநாயகர். விநாயகருக்குரிய ஷோடச நாமங்களில் (16 பெயர்கள்) 'விக்னராஜோ விநாயக' என்று இப்பெயர்கள் உள்ளன. இதில் விக்னராஜா தடைகளை உண்டாக்குவதில் கெட்டிக்காரர். விநாயகர் தடைகளைப் போக்குவதில் வல்லவர். இந்த இருவரின் நோக்கமும் அடிப்படையில் பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும் என்பதற்காகத் தான் என்கிறார் காஞ்சிப்பெரியவர். அதாவது தடையும் நானே...அதைப் போக்கும் விடையும் நானே என்கிறார்கள் இரட்டை பிள்ளையார்கள்.