கிருஷ்ணர் பிறந்த கதை
ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி நன்னாளைக் கோகுலாஷ்டமி என்பர். அஷ்டமி திதியில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்த கிருஷ்ணனின் பெயரால், இந்தப் பெயர் உண்டாயிற்று. கம்சன் என்னும் அரக்கனை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக, மதுராவிலுள்ள சிறைச்சாலையில் வசுதேவர், தேவகி தம்பதியின் எட்டாவது பிள்ளையாக கண்ணன் அவதரித்தார். அப்போது சிறையின் கதவுகள் தானாக திறந்ததோடு, வசுதேவர், தேவகியை பிணைத்திருந்த சங்கிலிகளும் விலகின. வசுதேவர் குழந்தை கண்ணனை தூக்கிக் கொண்டு ஆயர்பாடி புறப்பட்டார். யமுனைநதி இரண்டாகப் பிரிந்து அவருக்கு வழி விட்டது. பெருமழை பெய்ததால், ஆதிசேஷன் கண்ணனுக்கு குடையாக வந்து நின்றது. கோகுலத்தில் வசித்த நந்தகோபர், யசோதையிடம் கண்ணன் ஒப்படைக்கப்பட்டார். கோகுலமே கண்ணனைக் கண்டு விழாக்கோலம் பூண்டது. இந்த விழா மதுராவில் ஜென்மாஷ்டமி என்னும் பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.