உள்ளூர் செய்திகள்

பரிகாரம் செய்யுங்கள்! பலனை பெறுங்க!

தடைகளை நீக்கும் பரிகாரம்சிலருக்கு எதை எடுத்தாலும் தடை, தாமதம் என மனம் தளர்வடைந்து இருக்கும். இந்த தடை நீங்கி, நல்லவிதமாக திட்டங்கள் நிறைவேற வேண்டுமானால் விநாயகப்பெருமானை வழிபட வேண்டும்.பிள்ளையார்சுழி போட்டு எதையும் தொடங்க வேண்டும் என்று முன்னோர் குறிப்பிடுகின்றனர். நம்பி வழிபடுவோருக்கு சிறு பிள்ளை போல மகிழ்ந்து வரம் கொடுப்பவர் என்பதால், இவருக்கு 'பிள்ளையார்' என்று பெயர். இவரை விட 'மேலான தலைவர்' வேறு யாரும் இல்லை என்பதால் 'விநாயகர்' என்று சிறப்பிக்கப்படுகிறார். 'திக்கற்றவர்க்கு தெய்வமே துணை' என்ற பழமொழியும் இவரையே குறிப்பிடும். வீட்டிலும், ரோட்டிலும் என எந்த இடத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவர் இவர் மட்டுமே. அவ்வையார் அருளிய 'விநாயகர் அகவல்' அற்புதமான மந்திரநூல். இதில் சைவசித்தாந்தத்தை சாறாகப் பிழிந்து நமக்காக கொடுத்திருக்கிறாள். இதைத் தொடர்ந்து 48நாட்கள் படித்து வந்தால் தடைகள் பறந்தோடி விடும். இதுதவிர, கபிலமுனிவரின் காரியசித்திமாலை என்ற விநாயகர் துதியையும் படிக்கலாம். இதையும் விட எளிமையான பரிகாரம் ஒன்று உள்ளது. 'ஓம் ஸ்ரீ கணேசாய நம' 'ஓம் சக்திவிநாயகநம' என்ற மந்திரங்களில் ஏதாவது ஒன்றை தினமும் 108 முறை, காலையில் சொல்லிவிட்டு பணிகளைத் துவக்குங்கள். வளர்பிறை, தேய்பிறை சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் மாலையிட்டு 12 முறை வலம் வாருங்கள். தடைகளை நொறுக்கி முன்னேறுவீர்கள். பெருமாளின் திருநாமமான 'கேசவா' என்று ஏழுமுறை சொல்லிவிட்டு வெளியில் கிளம்பினாலும், தடையின்றி செயல்கள் நடக்கும். விபத்தில்லா பயணம் செய்ய முருகனைப் பிடியுங்க!வாகனங்களில் பயணம் செல்வது பகீரத பிரயத்தனமாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. வெளியில் சென்று விட்டு பத்திரமாக வீடு திரும்பவும், பயணம் இனிதாக அமையவும் எளிய பரிகாரம் ஒன்றுண்டு. கந்தரனுபூதியில் இருக்கும் நிறைவுப்பாடலான, ''உருவாய் அருவாய் உளதாய் இலதாய்மருவாய் மலராய் மணியாய் ஒலியாய்கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே'' என்ற பாடலைப் பாராயணம் செய்து விட்டு வீட்டிலிருந்து கிளம்புங்கள். இதனால், செல்லும் இடமெல்லாம் முருகப்பெருமான் கூடவே வந்து காத்தருள்வார். 'ஹரிஓம்' என்ற மந்திரத்தை ஜெபித்துவிட்டும் கிளம்பலாம். இம்மந்திர சக்தி கவசம் போல உங்களைப் பாதுகாக்கும்.ஒற்றுமையாய் வாழ என்ன வழி?சிலநேரங்களில் நன்றாக இருக்கும் குடும்பங்களில் கூட சூறாவளியாக புயல் வீசி விடுவதுண்டு. பல்வேறு பிரச்னைகளில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமலோ, அனுசரணை இல்லாததாலோ குடும்ப அமைதிக்கு பங்கம் வந்து விடுகிறது. கணவன்- மனைவி, பெற்றோர்- பிள்ளைகள் உறவு கூட பாதிக்கப்படுகிறது. இவர்கள் ''மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைகண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே'' என்ற தேவாரப்பாடலை 12 முறை பாராயணம் செய்து வரவேண்டும். விநாயகர், முருகன், சிவன்,பார்வதி ஆகிய நால்வரும் சேர்ந்திருக்கும் சிவகுடும்ப படம் வைத்து இப்பாடலைப் பாடுவது சிறந்த பரிகாரம். செவ்வாய், வெள்ளியில் இவ்வழிபாட்டை செய்யலாம். கோயில்களில் சுவாமி, அம்மன் சந்நிதிகளில் விளக்கேற்றுவதும் குடும்ப ஒற்றுமைக்கு வழி வகுக்கும்.