பரிகாரம் செய்யுங்கள்!! பயனை பெறுங்கள்!!!
வாழ்க்கையில் நமது எதிர்பார்ப்புகள் ஏராளம். ஆனால், என்ன காரணத்தாலோ தடங்கல் ஏற்பட்டு அவற்றை நிறைவேற்றுவதில் சிரமங்களை சிந்திக்கிறோம். அந்த சிரமங்களை எதிர்கொள்ள தெய்வஅனுகூலம் தேவை. அதற்கான பரிகாரங்களை இந்த பக்கத்தில் தந்துள்ளோம். மேளம் கொட்டி தாலிகட்ட பூச்சூடியவளுக்கு பூச்சூடுங்க!இல்லறம் அல்லது நல்லறம் அன்று என்பது அவ்வை வாக்கு. திருமணத்தை ஆயிரம் காலத்துப்பயிர் என்றனர். காலத்தைப் பொறுத்து பயிருக்குப் பெயரிட்டவர்கள் நம் முன்னோர். குறுவைப்பயிர், கோடைப்பயிர், ஓராண்டுப்பயிர் என்றெல்லாம் பெயர் வைத்தது போல, வாழையடி வாழையாக நல்ல சந்ததி தழைக்கவேண்டும் என்னும் அடிப்படையில் திருமணத்தை 'ஆயிரம் காலத்துப்பயிர்' என்று குறிப்பிட்டனர். இன்று திருமணத்தடை என்பது சகஜமான ஒன்றாகி விட்டது. பல பெண்களுக்கு 30 வயதைத் தாண்டியும் முதிர்கன்னிகளாகி திருமணம் நிச்சயமாகாமல் இருக்கிறது. அவர்களின் வாட்டத்தைப் போக்கி, பயிர் செழிக்க வந்த பருவமழையாக ஆண்டாளின் 'வாரணமாயிரம்' பாசுரம் உள்ளது. பூஜையறையில் விளக்கேற்றி, ஆண்டாள் படம் வைத்து பூமாலை இட வேண்டும். திருவிளக்கையே ஆண்டாளாகக் கருதியும் வழிபடலாம். பால் நிவேதனம் செய்து, காலை அல்லது மாலையில் கீழ்க்கண்ட பாசுரத்தை 12 முறை படிக்க வேண்டும். 'மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூதமுத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ்மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்' விரைவில் திருமணம் கைகூட அருள்புரியும் பாசுரம் இதுவாகும். இதன் பொருளையும் தெரிந்து கொள்ளுங்கள்.''தோழியே! மேளச்சத்தம் ஒலிக்கவும், வலம்புரிச்சங்குகள் முழங்கவும், முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட பந்தலின் கீழே இளை யவனும், நம்பியவரைக் காப்பவனும் ஆகிய மதுசூதனன் மாப்பிள்ளையாக வந்து என் கைகளைப் பற்றிக் கொள்ளும் காட்சியைக் கண்டேன்,''. ஆண்டாளின் கரத்தை ஆண்டவனே பற்றியது போல, உங்களை ஆளவும் ஒரு நல்லவர் வருவார் இனிதாக!விரும்பியதை இனி வாங்கி மகிழுங்கள்திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை நடத்துவது மட்டும் என்றில்லாமல், பலவித பொருட்களை வாங்கவும் நமக்கு விருப்பமாக உள்ளது. இந்த விருப்பங்கள் பல காரணங்களால் தடைபட்டு போகலாம். இந்த தடை நீங்க மாவிளக்கு பரிகாரத்தை வீட்டிலேயே செய்யலாம். விருப்பங்களை நிறைவேற்றும் திருப்பதி வெங்கடாஜலபதிக்காக சனிக்கிழமைகளிலும், விநாயகர், முருகன், மாரி, காளி,காமாட்சி போன்ற தெய்வங்களிடம் விருப்பத்தை தெரிவிக்க விரும்பினால் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளிலும் இவ்வழிபாட்டை செய்யலாம். இடித்து சலித்த பச்சரிசி அல்லது தினைமாவில் ஏலக்காய், வெல்லப்பாகு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவேண்டும். அதை காமாட்சி விளக்குபோல குழிவாகப் பிடித்து, அதனுள் நெய்விட்டு பஞ்சுத்திரி போட வேண்டும். இஷ்ட தெய்வத்தின் முன் ஒரு வாழை இலை அல்லது தாம்பளத்தில் இரண்டு தேங்காய் முறிகள், பழம், வெற்றிலை பாக்கு வைத்து, மாவிளக்கை ஏற்ற வேண்டும். நாம் எந்த தெய்வத்தை நினைத்து ஏற்றுகிறோமோ அந்த தெய்வம் வீட்டிற்குள் எழுந்தருளி இருப்பதாக எண்ணி, நம் விருப்பத்தை நிறைவேற்றித் தரும்படி வேண்டிக் கொள்ளவேண்டும். அந்தந்த தெய்வங்களுக்குரிய ஸ்லோகம் அல்லது பாடல்களைப் பாடுவது சிறப்பு. ஒருநாழிகையாவது (24நிமிடம்) மாவிளக்கு எரிவது அவசியம். வேண்டுதல் நிறைவேறிய பிறகும், இதே முறையில் இன்னும் ஒருமுறை மாவிளக்கேற்ற வேண்டும்.