முருகனுக்கு பிடித்த அபிஷேகம்
தைப்பூசத்தன்று முருகப்பெருமானுக்கு பன்னீர், சந்தனம், திரவியங்கள், பஞ்சாமிர்தம் என பலவகையான அபிஷேகம் செய்யப்படும். ஆனால், அவருக்கு மிகவும் பிடித்தமானது விபூதி அபிஷேகம். நதிகள், கடலில் சங்கமிக்கும் போது நதி என்ற பெயர் மறைந்து விடுகிறது. இதுபோல, விபூதி அபிஷேகம் செய்து, அதை தண்ணீரால் கழுவும் போது, அது அப்படியே கரைந்து மறைந்து விடுகிறது. இதுபோலவே, மனிதனும் தன்னை பிறருக்காக இழந்து, பரமாத்மாவாகிய இறைவனுடன் ஒன்றி கலக்க வேண்டும் என்பதை இந்த அபிஷேகம் உணர்த்துகிறது. தனக்காக இல்லாமல், பிறருக்காக வாழ்பவர்களை முருகப்பெருமானுக்கு மிகவும் பிடிக்கும். பெற்றவர்களைக் கூட விட்டு விட்டு, தன் பக்தர்களுக்காக பழநியில் கால்கடுக்க நிற்பவர் அவர். தனக்கென ஒரு கோவணத்தை மட்டும் அணிந்து கொண்டு, பக்தர்களுக்கு கேட்டதையெல்லாம் கொடுத்து அருள்பாலிக்கும் கருணைக்கடலாக விளங்குகிறார். மீண்டும் பிறக்காமல் இருக்க, நாம் முருகனுக்கு செய்ய வேண்டியது விபூதி அபிஷேகம்.