ஓங்கி உலகளந்த உத்தமன்
திருப்பாவையில் மூன்றாம் பாடல் 'ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி' என்று துவங்கும். திருமாலின் அவதாரங்கள் பத்தில், உத்தமமான அவதாரம் வாமனர். மற்ற அவதாரங்களில் திருமால் அசுரர்களைக் கொன்றிருக்கிறார். ஆனால், 'நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை' என்பது போல, ஒரு பிரகலாதனுக்காக அவனுடைய வம்சாவளியை எல்லாம் ஆதரித்தார் எம்பெருமான்.ஆம்...பிரகலாதன் அசுர குலத்தவன் என்றாலும் 'ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்தே அவனது தாரக மந்திரமாயிற்று. இந்த மந்திரத்தின் தன்மை அலாதியானது. 'எல்லாமும் நாராயணன்' என்றிருந்த அவனை பெற்ற தந்தை இரணியனே துன்புறுத்தினான். அந்த பக்தனைக் காக்க தூணை உடைத்துக் கொண்டு நரசிம்மராக வெளிப்பட்டார் திருமால். இரணியனைக் கொன்றார். ஆனால், பிரகலாதனின் பேரன் (விரோசனனின் பிள்ளை) மகாபலி சக்கரவர்த்தி ஆணவம் கொண்டவனாக இருந்தாலும், அவனை ஆசிர்வதித்து ஆட்கொண்டார். அவன் வம்சத்தில் வந்த பாணாசுரன் என்பவன் தவறு செய்தாலும், கைகளை வெட்டியதோடு முடித்துக் கொண்டார். இவ்வாறு உயிர்ப்பலி வாங்காத காரணத்தால் வாமனரை 'உத்தமன்' என போற்றுகிறாள் ஆண்டாள்.