ராமநாடகமே மிக உயர்ந்தது! - சொல்கிறார் காஞ்சிப்பெரியவர்
தமிழ்நாட்டில் ராமர் விஷயமான இலக்கியம் என்று எடுத்துக் கொண்டால் கம்பராமாயணத்துக்கு அடுத்த படியாக அருணாசலக்கவிராயருடைய ராமநாடகம் தான் பிரசித்தம். புகழ்பெற்றிருப்பதில் இரண்டாவது ஸ்தானம் என்றாலும், ஜனங்களின் வாயிலே புரண்டு வருகிறதிலேயோ, கம்பராமாயணத்தை விடவும் முதல் ஸ்தானம். ஏனென்றால், கம்பராமாயணம் எல்லாப் பொது மக்களுக்கும் புரியாததாகப் புலவர் மொழி காவியமாகி விட்டது. அருணாசலக்கவிராயர் பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் பிறந்து எழுபது எண்பது வயசு ஜீவித்தவர். அதனால், அவர் பேச்சுமொழி, பழமொழி, வசனம் எல்லாம் சேர்த்து அதோடு ரொம்ப முக்கியமாக ராகதாளங்கள் போட்டுப் பாடும் படியான கீர்த்தனைகளாக ராமநாடகத்தைப் பண்ணியிருக்கிறார். அதுவே, ஜனங்களின் வாய்ப்புழக்கத்திற்கு ஜாஸ்தியாக வந்துவிட்டது. நாடகமாக அது இருப்பதும் வசீகரத்திற்கு இன்னொரு காரணம். நாட்டிய நாடகமாக நடிப்பதற்கு ஏற்றதாக இது இருக்கிறது. பொது ஜனங்களில் இருந்து சங்கீத வித்வான்கள் வரை பலபேர் பாடியும், கதாகாலட்சேபத்தில் கையாண்டும், சதிர்க் கச்சேரி ஸ்திரீகளால் நடித்துக் காட்டியும் பல தினுசிலே ராமநாடகம் பரவிவிட்டது. பல பாட்டுக்களை தொடர்ச்சியாக அமைத்து கதையைச் சொல்லும், 'தரு' என்னும் பாடல் வகையை இது சேர்ந்ததாகும்.