உள்ளூர் செய்திகள்

வேதம் நிறைந்த தமிழகம்

உலகில் இருக்கும் கோயில்களில் பாதிக்குமேல் இந்தியாவில் உள்ளன. அதிலும் பாதிக்கு மேற்பட்ட கோயில்கள் தமிழகத்தில் உள்ளன. பழங்காலம் முதலே வேத நெறியின் வீடாக இருப்பதுதான் தமிழகம். மனித குலத்தின் முதல்வரான மநு, மதுரை வைகை நதியின் கிளைநதியான கிருதுமால் கரையில் வசித்ததாகவே பாகவத புராணம் சொல்கிறது. வேத தர்மம் இங்கேதான் பிறந்தது. உலகிலேயே ஈடு இணையில்லாத பக்திச் செல்வத்தையும், நீதி நுால்களையும் தந்த ஆழ்வார்கள், நாயன்மார்கள், பட்டினத்தார், சங்கப்புலவர்கள், திருவள்ளுவர், தாயுமானவர் ஆகியோர் வேதத்தின் பெருமையை பற்றி சொல்லியுள்ளார்கள். சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் வேதபாடசாலைகளில் வேள்வியை வளர்த்த செய்தியை கல்வெட்டுக்களில் பொறித்து மகிழ்ந்தார்கள். 'வேதம் நிறைந்த தமிழ்நாடு' என்று மகாகவி பாரதியாரும் பாடியுள்ளார்.