குரு பெயர்ச்சி பலன் கணித்த விதம்
வாக்கிய பஞ்சாங்கப்படி ஆகஸ்ட் 2, காலை 9.23 மணிக்கு இவர் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 2017 ஜனவரி 16 வரை (சித்திரை 2ம் பாதம்) கன்னி ராசியில் இருப்பார். பின் (சித்திரை 3ம் பாதம்) துலாம் ராசிக்கு அதிசாரமாக சென்று 2017, ஜனவரி 16 இரவு 2.55 மணி வரை தங்குகிறார். மீண்டும் கன்னி ராசிக்கு மார்ச் 11ல் திரும்பி செப்.2 வரை அங்கேயே தங்குகிறார். நவக்கிரகங்களில் முக்கியமானதாக கருதப்படுபவர் குரு. இவர் ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு காலம் தங்கி இருப்பார். பெரும்பாலும் எல்லா ராசியினருக்கும் நன்மைகளை செய்யவே விரும்புவார். கெடு பலன்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும், அது நமக்கு ஒரு படிப்பினையை தருவதற்காகத்தான் இருக்கும்.கன்னி ராசியில் குரு பகவான் இருக்கும் காலத்தில் அவர் என்னென்ன பலன்களை தருவார் என்று ஒவ்வொரு ராசி வாரியாக விரிவாக கணித்து கொடுக்கப்பட்டு உள்ளது. கோச்சார அடிப்படையில் பலன் பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட கிரகத்தை மட்டும் வைத்து பலனை பார்க்கக்கூடாது. அதன்படி முக்கிய கிரகங்களான சனி, ராகு, கேது ஆகியவையின் இருப்பிடத்தைக் கொண்டும் ஆராய்ந்து இங்கே பலன்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் விரைவாக சுழலும் செவ்வாய், சூரியன், புதன், சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்களின் நிலையை கருத்தில் கொண்டும் பலனையும் தொகுத்து தந்துள்ளோம். குரு கன்னி ராசியில் இருக்கிற காலத்தில், ராகு சிம்மத்தில் இருக்கிறார். கேது கும்பத்தில் இருக்கிறார். சனிபகவான் விருச்சிகத்தில் இருக்கிறார். சிலருக்கு குருபகவான் சாதகமான நிலையில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு மற்ற முக்கிய கிரகங்கள் சுபமாக இருந்தால் அவற்றின் மூலமாக நன்மை நடக்கும். மேலும் வாசகர்கள் இன்னொரு அம்சத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். இங்கே தரப்பட்டிருப்பது கோச்சார பலன்களே. இதில் சிலருக்கு சுமாரான பலன்களே நடக்கும் என்று குறிப்பிட்டு இருந்தால்கூட அவர்கள் ஜாதகத்தில் நல்ல திசை, புத்தி நடந்தால் நன்மை நடக்கும். இதுதவிர ஒவ்வொரு ராசியினருக்கும் பரிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பணத்தைக் கொட்டித்தான் பரிகாரம் செய்ய வேண்டும் என்பதில்லை. உங்களால் இயன்றதை செய்தால் போதும். இதனால் கெடுபலன்கள் குறைந்து நன்மை அதிகரிக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். காழியூர் நாராயணன்