உள்ளூர் செய்திகள்

நந்திக்கொடி பறந்த தேசம்

தேவார மூவரான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பல சிவத்தலங்களுக்கும் சென்று இறை வனைப் பாடித் துதித்தனர். இவர்களில் சம்பந்தர் மதுரையை ஆண்ட கூன்பாண்டியனை சைவனாக்கி, சிவத் தொண்டு செய்தார். திருநாவுக்கரசர் பல்லவ மன்னன் மகேந்திரனைச் சைவசமயத்தைப் பின்பற்றச் செய்தார். சோழமன்னர்கள் சிவபக்தியோடு இருந்தனர். குறிப்பாக ராஜராஜசோழனுக்கு 'சிவபாதசேகரன்' என்ற பெயரே உண்டு. பல்லவமன்னர்கள் தங்கள் நாட்டை 'சிவதேசம்' என்று அறிவித்தனர். நந்திக் கொடியும், அரசு முத்திரையில் நந்தி சின்னத்தையும் வைத்துக்கொண்டனர்.எட்டாம் நூற்றாண்டு வரை களப்பிர மன்னர்களின் ஆட்சி நடைபெற்றதால் தேவாரப்பாடல்கள் வெளி உலகிற்கு தெரியாமல் இருந்தன. கி.பி.846ல் விஜயாலயச்சோழன் களப்பிரரை வென்று சோழப்பேரரசை ஏற்படுத்தினான். இதன்பின், சைவசமயத்தின் பெருமை நிலைநிறுத்தப்பட்டது. தேவாரப்பாடல்கள் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. ஓதுவார்கள் அப்பாடல்களைப் பண்ணோடு பாடி சிவனைப் போற்றினர். எங்கும் சிவன் கோயில்கள் கட்டப்பட்டன. பழைய கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு திருவிழா நடத்தப்பட்டது. அதன்பின், 'தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!' என்னும் அளவுக்கு சிவவழிபாடு வளர்ந்தது.