திருப்பம் தரும் திருவோணம்
மகாபலி சக்கரவர்த்தி தன் நாட்டு மக்களுக்கு சிறப்பான ஆட்சியை வழங்கினார். ஆனால் அசுரனான அவர், தேவர்களை துன்புறுத்தினார். இதனால் அவர்கள் மகாவிஷ்ணுவிடம் சரணடைந்தனர். இந்நிலையில் இந்திர பதவியை அடைவதற்காக யாகம் ஒன்றை தொடங்கினார் மகாபலி. அதன் முடிவில் யார் எதைக் கேட்டாலும் மறுக்காமல் தானமளிக்க வேண்டும். அதன் பலனாக மகாபலிக்கு பதவி கிடைத்து விடும். இதை தடுக்கவே வாமனராக அவதரித்தார் மகாவிஷ்ணு. அழகிய குழந்தையின் தோற்றமும், ஆற்றல் மிகு அறிவின் ஏற்றமும் கொண்ட கம்பீர உருவத்துடன் இருந்தார். அசுர குருவான சுக்கிராச்சாரியாருக்கு வந்திருப்பவர் மகாவிஷ்ணு என்பது புரிந்தது. தானம் பெற வந்திருப்பவர்களில் குழந்தை வடிவில் நிற்கும் இவனுக்கு எதுவும் தராதே என எச்சரித்தார். ''குருநாதா! யார் எதைக் கேட்டாலும் மறுக்காமல் தர வேண்டும் என்பதே யாகத்தின் நோக்கம். நீங்கள் என்னைத் தடுப்பது நியாயமா?'' எனக் கேட்டார் மகாபலி. ''சாதாரண மனிதனாக இருந்தால் தடுக்க மாட்டேன். பாற்கடலில் இருக்கும் மகாவிஷ்ணுவே வந்திருப்பதால் விழிப்பாக இரு'' என்றார் சுக்கிராச்சாரியார். மகாபலி சம்மதிக்க வில்லை. அப்போது வாமனர் நெருங்கி வர வணங்கிய மகாபலி, '' உமக்கு என்ன வேண்டும்?'' என கேட்டார். ''மன்னா! பெரிதாக என்ன கேட்கப் போகிறேன்? என் காலால் மூன்றடி நிலம் அளித்தால் போதும்'' என்றார். '' சரி இப்போதே தந்தேன்'' என தீர்த்தத்தை சாய்த்து தாரை வார்க்க முயன்றார் மகாபலி. அதை தடுக்க எண்ணிய சுக்கிராச்சாரியார், வண்டாக மாறி தீர்த்தம் வரும் துளையை அடைத்தார். தீர்த்தம் வரவில்லையே என கையில் இருந்த தர்ப்பையால் துவாரத்தைக் குத்தினார். வண்டாக நின்ற சுக்கிராச்சாரியாரின் கண்ணில் தர்ப்பை படவே துளையை விட்டு விலகினார்.கமண்டல நீர் வெளியாகி வாமனரின் கையில் விழுந்தது. உடனே விண்ணுக்கும் மண்ணுக்குமாக வளரத் தொடங்கினார். பூமியை ஓரடியாகவும், வானத்தை இரண்டாவது அடியாகவும் அளந்தார். மூன்றாவது அடிக்கு இடம் எங்கே?'' எனக் கேட்டார் மகாவிஷ்ணு. தலை குனிந்த மகாபலி வேறு இடம் இல்லை. என்னை ஏற்று அருள்புரிக'' என வேண்டினார். தலை மீது திருவடியை வைத்து மகாபலியை பாதாள உலகிற்கு அனுப்பினார். ''இனி அங்கேயே தவம் செய். அடுத்த யுகத்தில் இந்திரபதவி கிடைக்கப் பெறுவாய். ஆண்டுக்கு ஒருமுறை ஓணநாளில் உன் நாட்டு மக்களைச் சந்திக்க வா'' என்றார். அந்நாளை ஓணமாக கொண்டாடுகின்றனர். இந்நாளில் அத்தப்பூ கோலமிட்டு, 'ஓண சத்யா' என்னும் விருந்து செய்து மகிழ்வர். இந்நாளில் காலையில் விரதம் தொடங்கி மதியம் பழங்கள் அல்லது உப்பில்லாத உணவை சாப்பிட்டு, மாலை சந்திர தரிசனம் செய்து வாமனரை வழிபட்டால் வாழ்வில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.- தேச.மங்கையர்க்கரசிathmagnanamaiyam@yahoo.com