உடுப்பி கிருஷ்ணர் துவார தரிசனம் ஏன்?
கிருஷ்ண பக்தரான கனகதாசர், உடுப்பி கிருஷ்ணன் கோயில் சென்றார். கூட்டம் அதிகமாக இருந்ததால், சேவகர்கள் பக்தர்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள். உள்ளே செல்ல முயன்ற கனகதாசரிடம், அவரது குலம் பற்றி விசாரித்தனர். அவர், 'இடையர் குலம்' என்று சொன்னதும், கழுத்தைப் பிடித்துத் வெளியே தள்ளினர். ''காவலர்களே! எல்லா மனிதர்களும் பிறப்பால் ஒன்றுதான். குலத்தால் பிரிப்பது நியாயமல்ல,'' என்று கனகதாசர் சொல்லியும் மறுத்தனர். இருந்தாலும் தாசர் நம்பிக்கை இழக்கவில்லை. உடுப்பி கிருஷ்ணனைத் தரிசித்துவிட்டுத்தான் ஊர் திரும்ப வேண்டும் என்று உறுதி பூண்டார். ''கிருஷ்ணா... உன் தரிசனம் எனக்கு மறுக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்? சதா சர்வ காலமும் உன் சிந்தனையிலேயே மூழ்கித் திளைக்கும் இந்த பக்தன் மீது இரக்கம் காட்டு,'' என கோயிலுக்கு பின்பக்கமாக வந்து கதறி அழுதார். அதுவரை, கிழக்கு நோக்கி நின்று அருள்பாலித்த கிருஷ்ணர் சிலை, பின்பக்கமான மேற்கு நோக்கி திரும்பியது. அத்துடன், தனது உண்மையான பக்தன் தரிசிக்கும் வகையில், சிலையின் கையிலிருந்த மத்து சுவரில் துவாரத்தை உண்டாக்கியது. துவாரத்தின் வழியாக கிருஷ்ணனின் திவ்ய தரிசனம் கனகதாசருக்கு கிடைத்தது. அன்றிலிருந்து உடுப்பி கிருஷ்ணர், மேற்கு நோக்கியே நிரந்தரமாக நின்று விட்டார். கனகதாசர் கண்டு தரிசித்த அந்த துவாரம் 'கனகன கிண்டி' எனப்படுகிறது.