உள்ளூர் செய்திகள்

ரொட்டி

சுவர்க்கத்தைச் சேர்ந்த ஹஜ்ரத் ஆதம், ஹஜ்ரத் ஹவ்வா இருவரும் இலங்கையில் உள்ள ஸரந்தீப் மலையில் வாழ்ந்தனர். ஒருநாள் சுவர்க்கத்தில் இருந்து வானவர்கள் இரண்டு ஜோடி செம்மறி ஆடுகள், ஒரு ஜோடி வெள்ளாடு, ஒட்டகம், மாடுகளை கொண்டு வந்தனர். செம்மறி ஆடுகளை அறுத்து தங்களுக்கு தேவையான ஆடைகளை தயாரித்தனர். அவர்களை நலம் விசாரிக்க வந்த வானவரான ஜிப்ரீலிடம், ''என் உடம்பெல்லாம் புல்லரிப்பது போல் உணர்கிறேன். ஏன் இப்படி இருக்கிறது என தெரியவில்லை'' என்றார் ஆதம். ''பசியின் காரணமாக இப்படி ஏற்படுகிறது'' என்றதும், ''இதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்'' எனக் கேட்டார் ஆதம். உடனே காளை மாடுகள், விவசாயம் செய்ய கலப்பை போன்ற சாதனங்கள், கோதுமை தானியங்களை வரவழைத்த ஜிப்ரீல் நிலத்தை உழுது பூமியில் விதைத்தார். அதில் இருந்து கோதுமை விளைந்தது. பசியில் இருந்த ஆதம் கோதுமையை அப்படியே பச்சையாக சாப்பிடத் துடித்தார். ஆனால் ஜிப்ரீல் தடுத்து நிறுத்தி, கோதுமையை மாவாக்கியதோடு அடுப்பில் தீ மூட்டி ரொட்டிகளைச் சுட்டார். அப்போது ஆதமிடம், ''இன்னும் சிறிது நேரத்தில் சூரியன் மறைந்து விடும். அப்போது நாம் சாப்பிடலாம். இப்படி செய்தால் நமக்கு நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும். அத்துடன் மூன்று வகையான உபகாரங்களை இறைவன் நமக்குச் செய்வான்'' என்றார் ஜிப்ரீல்.