அழகியின் சதி
ஸமூது சமுதாயத்தினர் காட்டில் வாழ்ந்து வந்தனர். அந்த இனத் தலைவரின் வேண்டுகோளை ஏற்று அதிசய ஒட்டகம் ஒன்றை வரவழைத்தார் ஸாலிஹ் நபி. பின்னர் அங்குள்ள மக்களிடம், ''இந்த ஒட்டகத்தையோ, அதன் குட்டியையோ தொந்தரவு செய்யாதீர்'' என்றார். அவை இரண்டும் காட்டில் மேய்ந்தன. அவற்றின் கம்பீரமான தோற்றத்தைக் கண்ட மற்ற மிருகங்கள் இரை தேடிச் செல்ல பயந்தன. அந்த இனத்தைச் சேர்ந்த அழகி ஒருத்தி இருந்தாள். அவள் வளர்த்த ஒட்டகம் மேலே குறிப்பிட்ட இரண்டு ஒட்டகத்தையும் கண்டு நடுங்கியது. இதனால் அந்த அழகி கோபப்பட்டாள். இந்நிலையில் அழகியை அடைய வேண்டும் என பலர் ஆசைப்பட்டனர். அவளும் அதை தனக்கு சாதகமாக்க விரும்பினாள். அன்றிரவு இளைஞன் ஒருவன் அவளை சந்திக்க வந்தான். அவனிடம் ''உன்னை உபசரிக்க என்னிடம் தண்ணீர் கூட இல்லை. இங்குள்ள இரண்டு ஒட்டகம் சுற்று வட்டாரத்தில் உள்ள தண்ணீரை எல்லாம் காலி செய்து விடுகிறது. முதலில் ஒட்டகத்தை கொன்று விட்டு வா'' என்றாள். அவனும், ''அதைக் கொன்று விட்டு வருகிறேன். எனக்கு என்ன தருவாய்'' எனக் கேட்டான். சிரித்தபடியே அவள், ''என்னை உனக்கு தருகிறேன்'' என்றாள். மூச்சு முட்ட மதுவைக் குடித்தான். பின்னர் சிலரது உதவியுடன் ஒட்டகத்தை அடித்துக் கொன்று இறைச்சியைப் பங்கிட்டான். பாவம்... துாரத்தில் இருந்து தாயைக் கண்டு கண்ணீர் விட்டது ஒட்டகக் குட்டி.